சமூக வலைதளங்களில் தற்போது 1980-களின் தோற்றத்தில் புகைப்படங்களை உருவாக்கும் AI டிரெண்ட் வேகமாக பரவி வருகிறது. ஸ்மார்ட்போனில் உள்ள புகைப்படத்தை ChatGPT, Gemini தளங்களில் பதிவேற்றி, குறிப்பிட்ட Prompt-ஐ வழங்கினால் போதும். பழைய கால திரைப்படங்களை நினைவுபடுத்தும் வகையில் புகைப்படங்கள் உருவாகின்றன. AI மூலம் இந்த புகைப்படங்களை உருவாக்கி தருவதற்கு மின்சாரம் மற்றும் தண்ணீர் பயன்பாடு அதிகளவில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்ஸ்டாகிராம், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் 80-களின் தோற்றத்தில் உருவாக்கப்பட்ட AI புகைப்படங்கள் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன. திரைப்பிரபலங்கள் மட்டுமின்றி பொதுமக்களும் இந்த டிரெண்டில் இணைந்துள்ளனர். இதற்காக பிரத்யேக புகைப்பட எடிட்டிங் திறன் தேவையில்லை. ஸ்மார்ட்போன், AI செயலி மற்றும் சரியான Prompt ஆகியவை இருந்தால் போதும்.
AI நிறுவனங்களின் API விலை அடிப்படையில், 1024 x 1024 அளவில் குறைந்த தரத்தில் 10 AI புகைப்படங்களை உருவாக்குவதற்கான செலவு சுமார் ரூ.10 எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதே அளவில் நடுத்தர தரத்தில் 10 புகைப்படங்களை உருவாக்க சுமார் ரூ.36 செலவாகும் என்றும், உயர்தரமான 10 புகைப்படங்களுக்கு சுமார் ரூ.142 வரை செலவாகும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒரு தனிநபர் சில புகைப்படங்களை உருவாக்கும்போது இந்தச் செலவு குறைவாகத் தோன்றலாம். ஆனால் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் ஒரே நேரத்தில் AI புகைப்படங்களை உருவாக்கும்போது, அதற்குத் தேவையான கணினி செயலாக்க வளங்களின் அளவு அதிகரிக்கிறது.
AI மூலம் ஒரு புகைப்படத்தை உருவாக்குவதற்கு சர்வர்களின் பயன்பாடு அதிகம் தேவைப்படுகிறது. சர்வர்கள் தொடர்ந்து செயல்படும்போது அதிக வெப்பம் உருவாகும். இதைக் கட்டுப்படுத்த குளிரூட்டும் அமைப்புகள் பயன்படுத்தப்படுகின்றன. இதனை பொறுத்து மின்சாரம் மற்றும் தண்ணீர் பயன்பாடு மாறுபடும்.
ஒரு AI புகைப்படத்தை உருவாக்குவதற்கு, AI அமைப்பில் டைப் செய்து பதில் பெறுவதைவிட சுமார் 1,450 மடங்கு கூடுதல் மின்சாரம் தேவைப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. AI புகைப்படம் உருவாக்குவதற்கான மின்சார உற்பத்தியில் மட்டும் சுமார் 29 மில்லி லிட்டர் தண்ணீர் பயன்படுத்தப்படுவதாகக் கூறப்படுகிறது.
AI சேவைகளின் பயன்பாடு அதிகரிக்கும் நிலையில், மின்சாரம் மட்டுமின்றி தண்ணீர் பயன்பாடும் கவனிக்க வேண்டிய அம்சமாக மாறியுள்ளது. AI பயன்பாடு தொடர்ந்து அதிகரிக்கும் நிலையில், 2030-ம் ஆண்டுக்குள் AI தரவு மையங்களுக்கு மட்டும் ஆண்டுக்கு சுமார் 945 டெராவாட் மின்சாரம் தேவைப்படும் என கணிக்கப்பட்டுள்ளது. தரவு மையங்களின் நேரடி மற்றும் மறைமுக குளிரூட்டலுக்கு ஆண்டுக்கு சுமார் 9.3 லட்சம் கோடி லிட்டர் தண்ணீர் தேவைப்படலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

