சட்டமன்ற இடைத்தேர்தலை முன்னிட்டு தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் த.வெ.க. வேட்பாளர் சத்யபாமாவை ஆதரித்து முதலமைச்சர் விஜய் நேற்று (04.10.2026) ரோடு ஷோ நடத்தி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, முதலமைச்சர் விஜய் மாட்டு வண்டியில் ஏறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
இந்நிலையில், முதலமைச்சர் விஜய்க்காக மாட்டு வண்டியை ஓட்டிய அசோக் என்பவர் காவல் துறையால் தேடப்படும் குற்றவாளி என அதிமுக தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இதனைச் சுட்டிக்காட்டி, “இதுதான் தூய சக்தியா?” என முதலமைச்சர் விஜய்க்கு அதிமுக கேள்வி எழுப்பியுள்ளது.
மாட்டு வண்டி ஓட்டியவர் தேடப்படும் குற்றவாளி – அதிமுக குற்றச்சாட்டு
அதிமுக மாவட்டச் செயலாளர் செல்வகுமார் பேசியபோது, “கடந்த 26 ஆம் தேதி காவல்துறை ஒரு FIR பதிவு செய்தது. அந்த FIR-இன் அடிப்படையில் தேடப்பட்டு வரும் குற்றவாளியான ‘கொட்டிகாமலை’ அசோக், முதலமைச்சரின் அருகில் இருந்து மாட்டு வண்டி ஓட்டுகிறார். இதுதான் தூய்மையான ஆட்சியா? எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்ட அந்த குற்றவாளியை ஏன் இன்னும் கைது செய்யவில்லை? என கேள்வி எழுப்பியுள்ளார்.
“தேடப்படும் குற்றவாளியுடன் CM பயணிக்கிறாரா?” – ஆர்.எஸ்.பாரதி கேள்வி
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, “தாராபுரம் பிரச்சாரத்தில் உதயநிதி விதிமீறலில் ஈடுபட்டதாக வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆனால் முதல்வர் விஜய் தாராபுரத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்தபோது அவருக்கு மாட்டுவண்டி ஓட்டியது யார்? காவல்துறையால் தேடப்படும் குற்றவாளியுடன் முதல்வர் இருந்தாரே அவர் மீது என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள்? என கேள்வி எழுப்பியுள்ளார்.

