ஒருவரைப் பார்த்தால் அவருடைய முகம் எப்படி இருக்கும் என்று நமக்குத் தெரியும். ஆனால் அதே முகத்தைப் பார்க்கும்போது கண்களின் வடிவம் மாறியிருந்தால், அல்லது பூனையின் கண்களைப் போலத் தெரிந்தால் எப்படி இருக்கும்? அமெரிக்காவைச் சேர்ந்த 28 வயது இளைஞர் ஒருவருக்கு இதுபோன்ற வித்தியாசமான அனுபவம் ஏற்பட்டுள்ளது.
கார்ல் (Karl) என்ற பெயரால் மட்டுமே அடையாளப்படுத்தப்படும் அந்த இளைஞருக்கு லூனா (Luna) என்ற செல்லப் பூனை உள்ளது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு அவருக்கு ஏற்பட்ட பார்வை மாற்றத்தால், சில நேரங்களில் மனிதர்களின் முகத்தில் தனது பூனையின் கண்கள் மற்றும் முக அம்சங்கள் தெரிவதாகக் கூறியுள்ளார்.
அவர் காலையில் முதலில் யாருடைய முகத்தைப் பார்க்கிறார் என்பதைப் பொறுத்து அவருடைய பார்வை மாறுகிறது. ஒருநாள் காலையில் முதலில் தனது செல்லப் பூனையான லூனாவைப் பார்த்தால், அதன்பிறகு அவர் சந்திக்கும் மனிதர்களின் முகங்களில் பூனையின் சில அம்சங்கள் தெரிவதாகக் கூறுகிறார்.
குறிப்பாக, பூனையின் பாதாம் வடிவிலான கண் அமைப்பு, பெரிதாகத் தெரியும் கண்மணிகள் மற்றும் முகத்தில் உள்ள கோடுகள் போன்றவை மனிதர்களின் முகங்களில் தோன்றுகின்றன. இந்த மாற்றங்கள் நேரில் பார்க்கும் மனிதர்களிடம் மட்டுமல்லாமல், இணையத்தில் பார்க்கும் முகங்களிலும் ஏற்படுகின்றன.
மூளை அறுவை சிகிச்சைக்கும் இதற்கும் என்ன தொடர்பு?
கார்லுக்கு இந்தப் பிரச்சினை திடீரென்று ஏற்பட்டதற்குப் பின்னால் ஒரு முக்கியமான மருத்துவக் காரணம் இருக்கிறது. அவருக்கு மூளையில் தமனிகளுக்கும் சிரைகளுக்கும் இடையே வழக்கத்திற்கு மாறான ரத்த நாள இணைப்புகள் காணப்பட்டுள்ளன. இதனை ஆர்டீரியோவீனஸ் மால்ஃபார்மேஷன் (Arteriovenous Malformation – AVM) என்று அழைக்கிறார்கள்.
இந்தப் பிரச்சினை காரணமாக மூளையில் ரத்தக்கசிவு ஏற்படும் அபாயம் இருக்கலாம். இதற்காக அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அப்போது மூளையின் வலது பக்க டெம்போரல் லோப் (Right Temporal Lobe) பகுதியில் ஒரு பகுதி அகற்றப்பட்டது.
மூளையின் இந்தப் பகுதி மனிதர்களின் முகங்களை அடையாளம் காண்பதிலும், முக அம்சங்களைச் செயல்படுத்துவதிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு சுமார் இரண்டு ஆண்டுகளாகவே கார்லுக்கு இந்த வித்தியாசமான பார்வை அனுபவங்கள் தொடர்ந்து வருகின்றன.
இந்தப் பாதிப்பின் பெயர் என்ன?
கார்லுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு ப்ரோசோபோமெட்டாமார்ஃபோப்சியா (Prosopometamorphopsia – PMO) என்று அழைக்கப்படுகிறது. இது ஒரு அரிய பார்வை சார்ந்த நரம்பியல் பாதிப்பாகும். இந்நிலையில் ஒருவர் மற்றவர்களின் முகங்களைப் பார்க்கும்போது அவை இயல்பான தோற்றத்தில் தெரியாமல் மாறுபட்ட வடிவங்களில் தோன்றலாம்.
சிலருக்கு முகத்தின் ஒரு பகுதி நீண்டு காணப்படலாம். சிலருக்கு கண்கள் பெரிதாகவோ, சிறியதாகவோ தெரியலாம். இன்னும் சிலருக்கு முகத்தின் குறிப்பிட்ட பகுதிகள் இடம் மாறியதைப் போலத் தோன்றலாம். கார்லின் விஷயத்தில் இது இன்னும் வித்தியாசமாக இருக்கிறது. அவர் ஏற்கெனவே பார்த்த பூனை அல்லது மனிதரின் முக அம்சங்கள், அடுத்து பார்க்கும் முகங்களில் கலந்து தெரிவதாக ஆய்வாளர்கள் விளக்குகின்றனர்.
இதற்கு முன்பும் இதேபோன்ற சம்பவம் நடந்துள்ளதா?
இந்த ஆய்வில் ஆராய்ச்சியாளர்கள் 1986-ம் ஆண்டு வெளியான மற்றொரு மருத்துவச் சம்பவத்தையும் குறிப்பிட்டுள்ளனர். அப்போது பேருந்தில் பயணம் செய்த 58 வயது பெண் ஒருவர், மற்றொரு பயணியின் மடியில் இருந்த பூடில் (Poodle) வகை நாயைப் பார்த்துள்ளார்.
அதன்பிறகு பேருந்தில் இருந்த மற்ற பயணிகளின் முகங்களிலும் அந்த நாயின் முகமே தெரிவதாக அவருக்கு அனுபவம் ஏற்பட்டுள்ளது. அந்தப் பெண்ணுக்கு இதற்கு ஒன்பது மாதங்களுக்கு முன்பு பக்கவாதம் ஏற்பட்டிருந்தது. அதன்பிறகு அவருக்கு இந்தப் பார்வை மாற்றம் உருவாகியிருந்தது.
ஆனால் அந்தப் பெண்ணின் அனுபவத்திற்கும் கார்லின் அனுபவத்திற்கும் வித்தியாசம் உள்ளது. பெண்ணுக்கு முழு நாயின் முகமும் மற்றவர்களிடம் தெரிவதைப் போல இருந்துள்ளது. கார்லுக்கோ கண்கள் போன்ற குறிப்பிட்ட முக அம்சங்கள் மட்டுமே ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு மாறித் தெரிவதாகக் கூறப்படுகிறது.

