கர்நாடக மாநிலத்தில் கர்நாடக சட்டமன்றத்தின் இருப்பிடமான விதான சௌதாவில் வெடிகுண்டு வைத்து தகர்ப்பது போன்ற ஏஐ வீடியோ வெளியிட்ட இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர் ஹஸ்ரத் அலி என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் புலம்பெயர் தொழிலாளி என விசாரணையில் தெரிய வந்துள்ளது.
பெங்களூருவில் அமைந்துள்ள விதான சௌதாவில் சட்டமன்றம் அமைந்துள்ளது. இந்தக் கட்டிடத்தை வெடிவைத்து தகர்ப்பது போன்ற காட்சிகள் அடங்கிய காணொளி, இன்ஸ்டாகிராமில் பரவி உள்ளது. ஏஐ மூலமும் உருவாக்கப்பட்ட இந்த வீடியோ இணையத்தில் பரவிய பின்னர் அந்தக் காணொளி நீக்கப்பட்டது. அதைப் பதிவிட்ட இன்ஸ்டாகிராம் கணக்கும் முடக்கப்பட்டது.
இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து, பீகாரைச் சேர்ந்த 25 வயதான ஹஸ்ரத் அலி என்பவரை கைது செய்துள்ளனர். இது போன்ற வீடியோவை உருவாக்கியது ஏன்? இதன் பின்னணியில் வேறு யாரேனும் உள்ளார்களா? என காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

