முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் இன்று காலை சோதனை நடத்தினர். தனியார் பள்ளிகளுக்கு அரசு அங்கீகாரம் மற்றும் பல்வேறு அனுமதிகளை பெற்றுத் தருவதாகக் கூறி பணம் வசூலிக்கப்பட்டதாக புகார் எழுந்ததை தொடர்ந்து இந்த சோதனை நடைபெற்றது.
மத்திய குற்றப்பிரிவு சோதனைக்கு திமுக தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இந்த நடவடிக்கை அரசியல் பழிவாங்கும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்படுவதாக கூறியிருந்தார்.
சோதனை நிறைவடைந்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அன்பில் மகேஷ், “சந்தேகத்தின் அடிப்படையில் எனது இல்லத்தில் 8 மணி நேரமாக அதிகாரிகள் சோதனையிட்டனர். காலை 7 மணியளவில் அதிகாரிகள் இல்லத்தில் நுழைந்தது முதல் சோதனை முடியும் வரை அனைத்து அறைகளையும் கோப்புகளையும் ஆய்வு செய்ய முழு ஒத்துழைப்பு தந்தோம்.
எனது வீட்டில் வைக்கப்பட்டிருந்த கல்வித்துறை சார்ந்த சில முக்கிய ஆவணங்களை மத்திய குற்றப்பிரிவு போலீசார் எடுத்துச் சென்றுள்ளனர்.
புதிய தலைமைச் செயலகம் மற்றும் இடைத்தேர்தல் தொடர்பாக நான் பேசியதால் ஏற்பட்ட அரசியல் காழ்ப்புணர்ச்சி மற்றும் மடைமாற்றத்திற்காகவே தவெக அரசு இந்த சோதனையை மேற்கொண்டுள்ளது.
நாங்கள் நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான்கள் இல்லை; 75 ஆண்டு கால இயக்கம் திமுக. மடியில் கனமில்லை, வழியில் பயமில்லை. திமுகவினர் எதற்கும் அஞ்சமாட்டார்கள். எதிர்த்துப் பேசினால் அடுத்த நிமிடம் ரெய்டு அடிப்பதா? இதுபோன்ற சலசலப்புகளுக்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன்.
வரும் செப்டம்பர் 18-ஆம் தேதி காலை 11 மணிக்கு நேரில் விசாரணைக்கு ஆஜராகுமாறு மத்திய குற்றப்பிரிவு அதிகாரிகள் சம்மன் அளித்துள்ளனர். விசாரணைக்கு ஆஜரான பின்னர், நேரடியாக இடைத்தேர்தல் நடைபெறும் தாராபுரத்திற்குச் சென்று பிரச்சாரத்தில் ஈடுபடுவேன்” என அவர் கூறியுள்ளார்.

