தமிழகத்தில் 13 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்டோ கட்டணத்தை மாற்றியமைத்து அரசு புதிய அரசாணையை வெளியிட்டுள்ளது. இதன்படி, ஆட்டோவில் பயணம் செய்வதற்கான குறைந்தபட்ச கட்டணம் ரூ.50 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
புதிய ஆட்டோ கட்டணம் என்ன?
சென்னை பெருநகரப் பகுதி மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளில் இயங்கும் ஒப்பந்த அடிப்படையிலான ஆட்டோக்களுக்கான கட்டணத்தை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மோட்டார் வாகனச் சட்டம், 1988-ன் பிரிவு 67-ன் கீழ் இந்தப் புதிய கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இதற்கு முன்பு 2013 மற்றும் 2014ஆம் ஆண்டுகளில் பிறப்பிக்கப்பட்ட கட்டண அரசாணைகள் ரத்து செய்யப்பட்டு, புதிய கட்டண முறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆட்டோவில் குறைந்தபட்ச கட்டணம் ரூ. 50 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. குறைந்தபட்ச தூரம் 1.8 கிலோ மீட்டராக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கூடுதலாக பயணம் செய்யும் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் தலா ரூ. 25 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. காத்திருப்பு கட்டணம் 1 நிமிடத்திற்கு தலா ரூ. 1 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மலைப்பாதைகளில் குறைந்தபட்ச கட்டணம் ரூ. 60 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மலைப்பாதைகளில் கூடுதலாக பயணம் செய்யும் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் தலா ரூ. 30 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இரவு நேர கட்டணம் (இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை) சாதாரண கட்டணத்தை விட 1.5 மடங்கு கூடுதலாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
13 ஆண்டுகளுக்குப் பிறகு கட்டணம் உயர்வு ஏன்?
தமிழகத்தில் கடைசியாக 2013ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆட்டோ கட்டணம் மாற்றியமைக்கப்பட்டது. அப்போது முதல் 1.8 கிலோ மீட்டருக்கு ரூ.25 குறைந்தபட்சக் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டது. அதற்குப் பிறகு ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் ரூ.12 வசூலிக்க வழிவகை செய்யப்பட்டது.
அதன்பிறகு பெட்ரோல் விலை உயர்வு, வாகனக் காப்பீட்டுச் செலவு, பராமரிப்புச் செலவு மற்றும் உதிரிபாகங்களின் விலை அதிகரிப்பு போன்ற காரணங்களால் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று ஆட்டோ ஓட்டுநர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த நிலையில், ஆட்டோ ஓட்டுநர் சங்கங்களின் தொடர் கோரிக்கைகளைத் தொடர்ந்து தற்போது புதிய கட்டணத்தை அரசு அறிவித்துள்ளது.

