HomeTamilnaduதிருமணம் ஆகாதவர்கள் மது அருந்த தடை ; மீறினால் ரூ.5,000 அபராதம்

திருமணம் ஆகாதவர்கள் மது அருந்த தடை ; மீறினால் ரூ.5,000 அபராதம்

மது மற்றும் போதைப்பொருள் பயன்பாட்டால் இளைஞர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுவதை தடுக்கும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அருகே உள்ள விழுந்தமாவடி கிராமத்தில் மதுப் பழக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் புதிய விதிமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

திருமணமாகாத இளைஞர்களுக்கு மதுவுக்கு தடை

விழுந்தமாவடி ஊர் பஞ்சாயத்து சார்பில் வைக்கப்பட்டுள்ள விழிப்புணர்வு பேனரில், கடந்த ஆகஸ்ட் 2-ம் தேதி முதல் திருமணமாகாத இளைஞர்கள் கிராமத்தில் மது அருந்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விதிமுறையை மீறி திருமணமாகாத ஒருவர் மது அருந்தியது ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டால், அவரிடம் இருந்து ரூ.5,000 அபராதம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திருமணமானவர்களுக்கும் அபராதம்

இந்த கட்டுப்பாடு திருமணமாகாதவர்களுக்கு மட்டும் என்றாலும், திருமணமானவர்களுக்கும் ஒரு முக்கிய விதிமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

திருமணமானவர்கள் குடிபோதையில் வீட்டிலோ அல்லது பொது இடங்களிலோ பிரச்சனையில் ஈடுபட்டு, அந்த விவகாரம் கிராமத்திற்கு வரும் சூழல் ஏற்பட்டால் அவர்களுக்கும் ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் என பேனரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மது இல்லாத கிராமத்தை உருவாக்குவோம்

விழுந்தமாவடி பகுதியில் வைக்கப்பட்டுள்ள விழிப்புணர்வு பேனரில், மதுவுக்கு எதிரான நடவடிக்கைக்கு பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

“மதுவை ஒழிப்போம், மக்களை காப்போம்” என்ற கருத்தை முன்னிறுத்தி, மதுவை தவிர்ப்பதன் மூலம் இளைஞர்களின் எதிர்காலத்தையும் சமூகத்தையும் பாதுகாக்கலாம் என்ற விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : ஆம்புலன்ஸ் 10 நிமிடத்தில் வர வேண்டும்: தாமதமானால் ரூ.10,000 அபராதம்

RELATED ARTICLES

Most Popular

Recent Comments