மேற்கு வங்க மாநிலத்தின் பெயரை மாற்றுவது தொடர்பாக மீண்டும் அரசியல் விவாதம் தொடங்கியுள்ளது. மாநிலத்தின் பெயரை ‘பச்சிம் பங்கா’ என மாற்றுவதற்கு முதலமைச்சர் சுவேந்து அதிகாரி ஆதரவு தெரிவித்துள்ளார். இந்த பெயர் மாற்றத்தை சட்டமன்றத்தில் மசோதா கொண்டு வந்து சட்டப்பூர்வமாக செயல்படுத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
நந்திகிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பாஜக மாநிலத் தலைவர் ஷாமிக் பட்டாச்சார்யா, மாநிலத்தின் பெயர் மாற்றத்திற்கான மசோதா விரைவில் சட்டமன்றத்தில் தாக்கல் செய்த வேண்டும் என கூறியிருந்தார். இதற்கு ஆதரவு தெரிவித்த சுவேந்து அதிகாரி, பெயர் மாற்றம் குறித்த அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்தார். இந்த விவகாரம் தற்போது அரசியல் விவாதத்தை கிளப்பியுள்ளது.
1999-ல், இடது முன்னணி அரசு மேற்கு வங்கத்திற்கு ‘பச்சிம் பாங்’ எனப் பெயர் மாற்ற முன்மொழிந்திருந்தது. அதே நேரத்தில், முன்னாள் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் சௌகதா ராய், மாநிலத்திற்கு ‘பங்களா’ எனப் பெயர் மாற்ற முன்மொழிந்திருந்தார். இருப்பினும், இந்த முன்மொழிவுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்கவில்லை.
2011-ல் திரிணாமூல் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பின்னர், மேற்கு வங்கத்திற்கு ‘பச்சிம் பாங்’ எனப் பெயர் மாற்றம் செய்யுமாறு மம்தா பானர்ஜி அரசு மத்திய அரசுக்கு ஒரு முன்மொழிவை அனுப்பியது. ஆனால், மீண்டும் மத்திய அரசு ஒப்புதல் அளிக்கவில்லை. இந்த நிலையில், தற்போது மீண்டும் பெயர் மாற்றம் தொடர்பான முயற்சி தொடங்கியுள்ளது.
இதையும் படிங்க : அதிகாரப் பதவிக்கு வந்து 25 ஆண்டுகளை நிறைவு செய்த பிரதமர் மோடி

