மகாராஷ்டிராவில் கோடிக்கணக்கான ரூபாய் சொத்து வைத்துள்ள பாஜக எம்எல்ஏ ஒருவர், தனது ஆடம்பர வாழ்க்கையை ஒதுக்கிவிட்டு பிச்சைக்காரர் வேடத்தில் சாலையில் அமர்ந்த சம்பவம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த அனுபவத்தின் மூலம் தனக்கு பணம், பதவி, மரியாதை மற்றும் மனிதநேயம் குறித்து புதிய புரிதல் கிடைத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
பராக் ஷா என்ற அந்த நபர், ரியல் எஸ்டேட் துறையில் முக்கிய தொழிலதிபராக உள்ளார். இவர், 2024 மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தல் வேட்புமனுவில் ரூ.3,383 கோடிக்கும் அதிகமான சொத்துக்கள் இருப்பதாக கூறியுள்ளார்.
ஜெயின் ஆன்மிக குருவான நம்ரமுனியின் ஆலோசனையை ஏற்று பிச்சை எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டதாக பராக் ஷா கூறியுள்ளார். வாழ்க்கையின் மற்றொரு பக்கத்தை நேரடியாக உணர வேண்டும் என்ற நோக்கில் இந்த அனுபவத்தை மேற்கொள்ளுமாறு அவரது குரு அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து தன்னிடம் இருக்கும் பாதுகாப்புப் பணியாளர்கள், கார்கள் உள்ளிட்ட வசதிகளைத் தவிர்த்து தன்னை யாரும் அடையாளம் கண்டுகொள்ளாத வகையில் மேக்கப் செய்து கொண்டு, சாதாரண உடையில் பிச்சை எடுக்க சென்றுள்ளார். அங்கு கிடைத்த உணவை ஏற்றுக்கொண்டு சாலையோரத்தில் அமர்ந்திருந்தார்.
இந்த அனுபவத்தில் தன்னை மிகவும் பாதித்த சம்பவங்களையும் பராக் ஷா பகிர்ந்துள்ளார். ஒருவர் அவரிடம் ரூ.20 கொடுத்து, அதைக் கொண்டு உணவு வாங்கிக்கொள்ளுமாறு கூறியதாக அவர் தெரிவித்தார். மற்றொரு சம்பவத்தில், பணம் இல்லை என்று கூறியபோது சாலையோர சமோசா விற்பனையாளர் ஒருவர் பணம் வாங்காமல் உணவு வழங்கியதாக கூறினார்.
இதன் மூலம் மும்பை மக்களிடம் இன்னும் மனிதநேயம் இருப்பதை உணர்ந்ததாகவும் அவர் கூறியுள்ளார். அதிகாரம், செல்வம், பதவி ஆகியவை ஒருவரின் சமூக அந்தஸ்தை எவ்வாறு மாற்றுகின்றன என்பதை நேரடியாக உணர்ந்ததாகவும் கூறியுள்ளார். மேலும், பணமும் அதிகாரமும் ஒருவருக்குள் உருவாக்கக்கூடிய அகந்தையை குறைத்து, தன்னை நிலைநிறுத்திக்கொள்ள இந்த அனுபவம் உதவியதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த அனுபவத்தில் தன்னை அதிர்ச்சிக்குள்ளாக்கிய மற்றொரு சம்பவத்தையும் ஷா கூறியுள்ளார். தனது சொந்த குடியிருப்பு வளாகத்துக்குள் பிச்சைக்காரர் தோற்றத்தில் சென்றபோது, அங்கிருந்த காவலாளி அவரை வெளியே அனுப்பியதாக தெரிவித்துள்ளார்.
இதுபோன்ற சம்பவங்கள், மனிதர்களை அவர்களின் தனிப்பட்ட குணத்தை விட பணம், பதவி மற்றும் அதிகாரத்தின் அடிப்படையில் மதிப்பிடும் சமூக மனநிலையைப் பற்றி சிந்திக்க வைத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
யார் இந்த பராக் ஷா?
பராக் ஷா அரசியல்வாதியாக மட்டுமல்லாமல் ரியல் எஸ்டேட் துறையிலும் செயல்பட்டு வருகிறார். மும்பையைச் சேர்ந்த Man Infra நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் அவர் உள்ளார். அந்த நிறுவனத்தின் மதிப்பு ரூ.5,000 கோடிக்கு மேல் இருப்பதாக செய்தித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கு முன்பு மும்பை மாநகராட்சியின் கவுன்சிலராகவும் பணியாற்றியுள்ளார். 2024 சட்டப்பேரவைத் தேர்தலின்போது ரூ.3,383 கோடிக்கும் அதிகமான சொத்துக்கள் இருப்பதாக கூறியிருந்தார். இவ்வளவு சொத்துக்கள் கொண்ட ஒருவர் தனது அடையாளத்தையும் வசதிகளையும் மறைத்து, சில மணி நேரங்கள் பிச்சைக்காரராக வாழ்ந்தது தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.

