இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் மற்றும் முன்னாள் பாஜக எம்.பி. பிரிஜ் பூஷண் ஷரண் சிங், பெண் மல்யுத்த வீராங்கனைகள் அளித்திருந்த பாலியல் தொல்லை குற்றச்சாட்டு வழக்கில் டெல்லி நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் இணை குற்றஞ்சாட்டப்பட்டிருந்த வினோத் தோமரும் குற்றமற்றவர் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
வழக்கின் பின்னணி
கடந்த 2023-ல் பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது 6 மல்யுத்த வீராங்கனைகளும், ஒரு மைனர் வீராங்கனையும் பாலியல் துன்புறுத்தல் புகார் அளித்தனர். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படாததால் மல்யுத்த வீராங்கனைகள் மற்றும் வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அது உலக அளவில் கவனம் பெற்றது.
தொடர்ந்து இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிமன்றம் பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டது. இதையடுத்து டெல்லி போலீஸார் பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது இரு எப்ஐஆர் பதிவு செய்தனர்.
நீதிமன்ற விசாரணை
காவல்துறை விசாரணையை நிறைவு செய்த பின்னர், 2023 ஜூன் மாதத்தில் ஆயிரக்கணக்கான பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த சில பெண் மல்யுத்த வீராங்கனைகள் தெரிவித்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வழக்கு தொடர்ந்து விசாரிக்கப்பட்டது. இறுதி வாதங்கள் முடிவடைந்ததைத் தொடர்ந்து, டெல்லி ரவுஸ் அவென்யூ நீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்து வைத்திருந்தது. அதன்பிறகு இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
நீதிமன்ற தீர்ப்பு என்ன?
நீதிமன்றம், பிரிஜ் பூஷண் ஷரண் சிங் மற்றும் வினோத் தோமர் ஆகியோருக்கு எதிரான குற்றச்சாட்டுகளை நிரூபிக்க போதுமான ஆதாரங்கள் இல்லை எனக் கருதி இருவரையும் விடுவித்தது. தீர்ப்புக்குப் பிறகு பேசிய பிரிஜ் பூஷண் ஷரண் சிங், தன் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்ட நாளிலேயே குற்றம் நிரூபிக்கப்பட்டால் எந்த தண்டனையையும் ஏற்கத் தயாராக இருப்பதாக கூறியிருந்ததாகவும், தற்போது நீதிமன்றம் தன்னை குற்றமற்றவர் என அறிவித்திருப்பதாகவும் தெரிவித்தார்.
தீர்ப்புக்குப் பிறகு ஆதரவாளர்கள் கொண்டாட்டம்
நீதிமன்ற தீர்ப்பு வெளியானதும், பிரிஜ் பூஷண் ஷரண் சிங்கின் ஆதரவாளர்கள் அவரது இல்லம் முன்பு பட்டாசு வெடித்தும், மலர் தூவியும் கொண்டாடினர். அவருக்கு ஆதரவாக முழக்கங்களும் எழுப்பப்பட்டன. இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தற்போதைய தலைவர் சஞ்சய் சிங், இந்த தீர்ப்பை வரவேற்று மகிழ்ச்சி தெரிவித்தார்.
