ரோலர் கோஸ்டரில் பயணம் செய்தால் சிறிய அளவிலான சிறுநீரகக் கற்கள் நகர்ந்து வெளியேற உதவும் என ஓர் ஆய்வு தெரிவிக்கிறது. அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை சேர்ந்த ஒருவர் டிஸ்னி வேர்ல்டு கேளிக்கைப் பூங்காவில் ரோலர் கோஸ்டரில் பயணம் செய்தபோது சிறுநீரகக் கற்கள் வெளியேறியதாகத் தெரிவித்திருந்தார்.
இது குறித்து ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்ய தொடங்கினர். செயற்கையாக சிறுநீரகத்தை உருவாக்கி அதில் வெவ்வேறு அளவிலான சிறுநீரகக் கற்களையும் வைத்தனர். பின்னர் அதை வைத்துக்கொண்டு டிஸ்னி வேர்ல்டில் உள்ள பிக் தண்டர் மவுண்டன் ரயில் சவாரியில் 20 முறை பயணம் செய்தனர். ஒவ்வொரு பயணத்தின்போதும் கற்கள் நகர்ந்ததை ஆராய்ச்சியாளர்கள் கவனித்தனர்.
பின்பக்க இருக்கையில் பயணித்தபோது கற்கள் வெளியேறும் விகிதம் 63.89 சதவீதமாக இருந்ததாகவும் முன்பக்க இருக்கையில் பயணித்தபோது இந்த விகிதம் 16.67 சதவீதமாக இருந்ததாகவும் ஆராய்ச்சியில் தெரிய வந்தது.
இவை செயற்கைச் சிறுநீரக மாதிரியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் முடிவுகள் மட்டுமே. இதை மனிதர்களுக்கு நேரடியாகப் பொருத்திப் பார்த்து, இதே அளவு பலன் கிடைக்கும் என்று முடிவு செய்ய முடியாது. இந்த ஆய்வு சுவாரசியமான தகவலை வழங்கினாலும், ரோலர் கோஸ்டரில் பயணித்தால் சிறுநீரக கல் வெளியேறும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.
சிறுநீரகத்தில் உருவாகும் கற்களின் அளவு, வடிவம் மற்றும் அவை அமைந்துள்ள இடம் ஆகியவற்றைப் பொறுத்து அவை வெளியேறும். சில சிறிய கற்கள் இயற்கையாக வெளியேறலாம். பெரிய கற்கள் சிறுநீர் செல்லும் பாதையில் அடைப்பை ஏற்படுத்தி, கடுமையான வலி ஏற்படுத்தும்.
சிறுநீரகக் கற்கள் இருப்பதாகச் சந்தேகம் ஏற்பட்டால் மருத்துவரை அணுகி, கற்களின் அளவு மற்றும் இருப்பிடத்தைப் பரிசோதனை மூலம் தெரிந்துகொள்வது அவசியம்.

