குடையை மறக்காதீங்க! சென்னை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

அக்டோபர் மாதங்களில் வெயிலின் வெப்பம் குறைந்து மழை பெய்ய ஆரம்பிக்கும். ஆனால் இந்த முறை எல் நினோ தாக்கம் காரணமாக வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இந்த சூழலில் மகிழ்ச்சி தரும் விதமாக வானிலை மையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, தமிழகத்தில் சென்னை உள்பட 10 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை,ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. மேலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 15-ம் தேதி தொடங்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் முன்னதாகக் கணித்திருந்தது. இந்நிலையில், சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அக்டோபர் 14-ம் தேதி முதலே பருவமழையின் ஆரம்பக்கட்ட மழை பெய்யத் தொடங்கும் எனத் தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் அடுத்த இரண்டு வாரங்களில் மழை பெய்யும் விதம் குறித்து பிரதீப் ஜான் தெரிவித்துள்ளதாவது: அவ்வப்போது திடீர் மழைப்பொழிவு ஏற்படலாம். சில மணி நேர இடைவெளிக்குப் பிறகு மீண்டும் மழை பெய்ய வாய்ப்புள்ளது. சில பகுதிகளில் கனமழையும் பெய்யக்கூடும். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அடுத்த இரண்டு வாரங்களுக்கு விட்டுவிட்டு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Saravanan
Saravananhttps://suryamalar.in/
முக்கியமான தமிழ் செய்திகள், தொழில்நுட்பம், சினிமா, சர்வதேச நிகழ்வுகள் மற்றும் மருத்துவம் குறித்த செய்திகளை தொடர்ந்து எழுதி வருகிறேன். நம்பகமான ஆதாரங்களின் அடிப்படையில் துல்லியமான மற்றும் பயனுள்ள தகவல்களை வாசகர்களுக்கு வழங்குவதே எனது நோக்கம்.
HTML tutorial