சீனாவைச் சேர்ந்த 32 வயது தொழிலதிபர் ஒருவர் உடலை சொறியும் வித்தியாசமான தொழில் ஒன்றை ஆரம்பித்துள்ளார். இந்த சேவையின் மூலம் மாதத்திற்கு சுமார் 1 லட்சம் யுவான், இந்திய மதிப்பில் ரூ.14 லட்சம் வருவாய் கிடைப்பதாக கூறப்பட்டுள்ளது.
ஹூபெய் மாகாணத்தைச் சேர்ந்த ஜாங் சியாவோகியாவ் என்பவர் இந்த தொழிலை செய்து வருகிறார். வாடிக்கையாளர்கள் படுக்கையில் வசதியாக படுத்துக்கொள்ள, பயிற்சி பெற்ற ஊழியர்கள் உடலின் பல்வேறு பகுதிகளில் ஏற்படும் அரிப்பை மெதுவாக சொறிந்து விடுகின்றனர். இதற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட கூர்மையான நகங்களை ஊழியர்கள் பயன்படுத்துகின்றனர்.
இந்த சேவைக்கு ஒரு மணி நேரத்திற்கு 300 யுவான், அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ.4,200 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இந்த சேவை வெறும் அரிப்பை போக்குவதற்காக மட்டும் நடத்தப்படுவதில்லை என ஜாங் தெரிவித்துள்ளார். வாடிக்கையாளர்கள் ஓய்வெடுக்கவும், மன அழுத்தத்தை குறைக்கவும், நன்றாக தூங்கவும் உதவும் வகையில் சேவை உருவாக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
சில நேரங்களில் உடலின் உணர்திறன் அதிகமான பகுதிகளில் சொறியும்போது வாடிக்கையாளர்களுக்கு சிரிப்பு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சில வாடிக்கையாளர்கள் வழக்கமான மசாஜைவிட இந்த அனுபவம் தங்களுக்கு நன்றாக இருப்பதாக கூறுகின்றனர்.
ஜாங் தனது முதல் கிளையை 2026-ம் ஆண்டு மே மாதம் தொடங்கினர். அதற்கு அடுத்த மாதம், ஜூன் மாதத்தில், இரண்டாவது கிளையைத் திறந்துள்ளார். இந்த இரண்டு கிளைகளும் சேர்ந்து மாதத்திற்கு சுமார் 1 லட்சம் யுவான், அதாவது ரூ.14 லட்சம் அளவுக்கு மொத்த வருவாய் ஈட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரு கிளைகளும் தங்களது செலவுகளை ஈடுகட்டும் நிலையை அடைந்து, தற்போது லாபம் ஈட்டத் தொடங்கியுள்ளதாக ஜாங் கூறியுள்ளார். தற்போது கிடைத்துள்ள வரவேற்பை தொடர்ந்து, இந்த சேவையை மேலும் பல நகரங்களுக்கு கொண்டு செல்ல ஜாங் திட்டமிட்டுள்ளார்.

