பிரபல நிறுவனங்களின் பெயரில் போலி மருந்துகள்! இமாச்சலில் சிக்கிய கும்பல்

பிரபல மருந்து நிறுவனங்களின் பெயர்களைப் பயன்படுத்தி போலியான மருந்துகள் தயாரிக்கப்பட்டு பல்வேறு மாநிலங்களுக்கு விநியோகம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த அக்டோபர் 30ஆம் தேதி உத்தரப் பிரதேசத்தின் வாரணாசியில் உள்ள எஸ்.பி. மெடிக்கல் ஸ்டோரில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். உரிய மருந்து விற்பனை உரிமம் இல்லாமல் செயல்பட்டு வந்த அந்தக் கடையில், மான்கைண்ட் (Mankind) என்ற பிரபல நிறுவனத்தின் பெயரில் விற்பனை செய்யப்பட்ட நியூரோகைண்ட்-எல்சி மாத்திரைகள் போலியானவை என்பது கண்டறியப்பட்டது.

இதையடுத்து சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் மருந்துகள் குறித்த விவரங்கள் சரிபார்க்கப்பட்டன. நிறுவனத்தின் புகாரும், மாதிரிகளின் ஒப்பீட்டுப் பரிசோதனையும் போலி மருந்துகள் என்பது உறுதிப்படுத்தின. அங்கிருந்து சுமார் ரூ.5 லட்சம் மதிப்பிலான சட்டவிரோத மருந்துகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், நவம்பர் 2ஆம் தேதி வாரணாசியைச் சேர்ந்த சுரேந்திர நாத் மிஸ்ரா என்பவரின் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. அங்கு முறையான ஆவணங்கள் இல்லாமல் 17 வகையான மருந்துகள் சேமித்து வைக்கப்பட்டிருந்தன. அவற்றில் சில மருந்துகளின் பெயர்கள் மற்றும் லேபிள்களில் எழுத்துப் பிழைகள் உள்ளிட்ட முரண்பாடுகள் இருந்ததால் 11 மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டன. சுமார் ரூ.2 லட்சம் மதிப்புள்ள மருந்துகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

விசாரணையின்போது, அபிஷேக் சிங் என்ற ரவியிடமிருந்து மருந்துகளைப் பெற்றதாக சுரேந்திர நாத் மிஸ்ரா தெரிவித்துள்ளார். இதையடுத்து அபிஷேக் சிங்கை கைது செய்து விசாரித்தபோது, இமாச்சலப் பிரதேசத்தின் சோலன் மாவட்டத்தில் சட்டவிரோதமாக மருந்துகள் தயாரிக்கப்படுவது குறித்த தகவல் கிடைத்தது.

அந்தத் தகவலின் அடிப்படையில் நவம்பர் 18ஆம் தேதி சோலன் மாவட்டம் நாலாகர் பகுதியில் உள்ள ராஜ்புரா-கேரா பைபாஸ் அருகே அதிகாரிகள் சோதனை நடத்தினர். அங்கு உரிமம் இல்லாமல் மருந்துகள், போலி மாத்திரைகள் தயாரிக்கப்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்தச் சோதனையில் சுமார் 67 ஆயிரம் ஆன்டிபயாடிக் மாத்திரைகள், 6,500 பிரெகாபலின் கேப்சூல்கள், மருந்து தயாரிப்புக்கான மூலப்பொருட்கள் மற்றும் பேக்கிங் இயந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Saravanan
Saravananhttps://suryamalar.in/
முக்கியமான தமிழ் செய்திகள், தொழில்நுட்பம், சினிமா, சர்வதேச நிகழ்வுகள் மற்றும் மருத்துவம் குறித்த செய்திகளை தொடர்ந்து எழுதி வருகிறேன். நம்பகமான ஆதாரங்களின் அடிப்படையில் துல்லியமான மற்றும் பயனுள்ள தகவல்களை வாசகர்களுக்கு வழங்குவதே எனது நோக்கம்.
HTML tutorial