எஸ்.பி.பி. நினைவு நாள்: தமிழ் சினிமாவில் தொடங்கிய மறக்க முடியாத இசைப் பயணம்

செப்டம்பர் 25ஆம் தேதி எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது. இந்திய திரையுலகின் மிக முக்கியமான பின்னணிப் பாடகர்களில் ஒருவராகத் திகழ்ந்த எஸ்.பி. பாலசுப்பிரமணியம் மறைந்து ஆண்டுகள் கடந்தாலும், அவரது குரல் மூலம் உருவான பாடல்கள் இன்றும் ரசிகர்களின் மனதில் ஒலித்துக்கொண்டுதான் இருக்கிறது.

இசை மீது சிறு வயது முதலே ஆர்வம்

எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் இயற்பெயர் ஸ்ரீபதி பண்டிதாரத்யுல பாலசுப்பிரமணியம். 1946ஆம் ஆண்டு ஜூன் 4ஆம் தேதி ஆந்திரப் பிரதேசத்தின் நெல்லூரில் பிறந்தார். அவரது தந்தை எஸ்.பி. சம்பமூர்த்தி ஹரிகதா கலைஞராகவும் நாடகக் கலைஞராகவும் இருந்தார்.

ஆரம்பத்தில் பொறியியல் படித்து பொறியாளராக வேண்டும் என்ற எண்ணத்துடன் கல்வி பயின்றார். சிறு வயது முதலே இசையில் ஆர்வம் கொண்டிருந்த அவர், கல்லூரி காலத்திலேயே பல்வேறு பாடல் போட்டிகளில் கலந்து கொண்டு தனது திறமையை வெளிப்படுத்தினார். சென்னையில் நடைபெற்ற தெலுங்கு கலாச்சார அமைப்பின் பாடல் போட்டியில் முதல் பரிசு பெற்றார்.

தமிழ் சினிமாவுக்குள் வந்த எஸ்.பி.பி.

1960-களின் பிற்பகுதியில். இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதனுடன் இணைந்து அவர் தமிழில் பாடத் தொடங்கினார். எம்.ஜி.ஆர். நடித்த ‘அடிமைப் பெண்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘ஆயிரம் நிலவே வா’ பாடல் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் தமிழ் திரையிசைப் பயணத்தில் முக்கிய மைல்கல்லாக அமைந்தது.

இதற்கு முன்பாகவே சாந்தி நிலையம் திரைப்படத்திற்காக ‘இயற்கையெனும் இளைய கன்னி’ பாடலை அவர் பாடியிருந்தார். ஆனால் அடிமைப் பெண் திரைப்படப் பாடல் முதலில் வெளிவந்ததால், தமிழ் ரசிகர்களிடம் எஸ்.பி.பி.யின் குரல் பரவலாக சென்றடைந்தது. தமிழில் பாடத் தொடங்கிய ஆரம்ப காலத்தில் அவரது உச்சரிப்பில் தெலுங்கு மொழியின் தாக்கம் இருந்ததாகக் கூறப்படுகிறது. அதை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு தமிழ் மொழியை கற்றுக்கொண்டார்.

பல தலைமுறைகளின் குரலாக மாறிய எஸ்.பி.பி.

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட பல இந்திய மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களை எஸ்.பி. பாலசுப்பிரமணியம் பாடியுள்ளார். நாயகர்களின் வயது, கதாபாத்திரத்தின் தன்மை, பாடலின் சூழல் ஆகியவற்றுக்கு ஏற்ப தனது குரலை மாற்றக்கூடிய திறமை அவருக்கு இருந்தது.

மறைந்தாலும் மறையாத குரல்

74 வயதான பாலசுப்பிரமணியனுக்கு 2020 ம் ஆண்டில் அவர்க்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். செப்டம்பர் 24 அன்று, இவருடைய உடல்நிலை மீண்டும் மோசமடைந்ததைத் தொடர்ந்து, இவருக்கு மருத்துவர்கள் தீவிரச் சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல், 2020 செப்டம்பர் 25 அன்று, அவரது உயிர் பிரிந்தது.

அவரது மறைவு இந்திய திரையுலகில் பெரும் இழப்பாக அமைந்தது. பின்னர் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டில் முழு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்குகள் நடைபெற்றன. இன்று அவரது நினைவு நாளில் ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலகைச் சேர்ந்த பலரும் அவரது பாடல்களையும் இசைப் பங்களிப்பையும் நினைவுகூர்ந்து வருகின்றனர்.

Saravanan
Saravananhttps://suryamalar.in/
முக்கியமான தமிழ் செய்திகள், தொழில்நுட்பம், சினிமா, சர்வதேச நிகழ்வுகள் மற்றும் மருத்துவம் குறித்த செய்திகளை தொடர்ந்து எழுதி வருகிறேன். நம்பகமான ஆதாரங்களின் அடிப்படையில் துல்லியமான மற்றும் பயனுள்ள தகவல்களை வாசகர்களுக்கு வழங்குவதே எனது நோக்கம்.
HTML tutorial