டெங்கு காய்ச்சல் என்பது கொசுக்களால் பரவும் ஒரு வைரஸ் தொற்று ஆகும். இது ஏடிஸ் என்கிற கொசுக்கள் கடிப்பதால் ஏற்படுகிறது. அதிக காய்ச்சல், தலைவலி, தசை மற்றும் மூட்டு வலி, வாந்தி, கண்களுக்குப் பின்புறம் வலி, தோலில் தடிப்புகள் உள்ளிட்டவை பொதுவான அறிகுறிகள் ஆகும்.
சிலருக்கு நோய் தீவிரமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையை ஏற்படுத்தக்கூடும். எனவே, டெங்கு பாதிப்பு இருப்பதாக சந்தேகம் ஏற்பட்டால் உடனே மருத்துவரிடம் சென்று தகுந்த சிகிச்சை எடுத்துக்கொள்வது அவசியம்.
டெங்குவின் முக்கிய அறிகுறிகள்
டெங்கு தொற்று ஏற்பட்டவர்களுக்கு அறிகுறிகள் பொதுவாக 4 முதல் 10 நாட்களுக்குள் தொடங்கலாம். சிலருக்கு அறிகுறிகள் இல்லாமலும் இருக்கலாம்.
அதிக காய்ச்சல், தலைவலி, தசை, எலும்பு அல்லது மூட்டு வலி, கண்களுக்குப் பின்புறம் வலி, குமட்டல் அல்லது வாந்தி, தோலில் தடிப்புகள், உடல் சோர்வு ஆகியவை முக்கிய அறிகுறிகளாக பார்க்கப்படுகிறது.
பெரும்பாலானவர்களுக்கு டெங்கு ஒரு முதல் இரண்டு வாரங்களுக்குள் குணமடையலாம். ஆனால் சிலருக்கு நோய் தீவிரமடைந்து ரத்தக்கசிவு, ரத்த அழுத்தம் குறைதல், உடல் உறுப்புகள் பாதிப்பு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்.
கொசுக்கடியை தடுப்பது எப்படி?
வீடு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் தேங்கியிருக்கும் தண்ணீரை அகற்ற வேண்டும். குறிப்பாக, வாளிகள், பூந்தொட்டிகள், பாத்திரங்கள் உள்ளிட்டவற்றில் தேங்கும் தண்ணீரில் கொசுக்கள் இனப்பெருக்கம் செய்யக்கூடும். எனவே, வீட்டை சுற்றி தண்ணீர் தேங்கும் இடங்களை தொடர்ந்து சுத்தம் செய்வது அவசியம்.
உடலை முழுமையாக மூடும் ஆடைகளை அணிவது, கொசு விரட்டிகளைப் பயன்படுத்துவது, ஜன்னல், கதவுகளில் கொசு தடுப்பு வலைகளைப் பயன்படுத்துவது போன்றவை கொசுக்களை வீட்டில் வரவிடாமல் தடுக்கும்.
என்ன சாப்பிடலாம்?
டெங்குவால் பாதிக்கப்பட்டவர்கள் முதலில் செய்ய வேண்டியது எவ்வளவு நீர்ச்சத்து கொண்ட உணவுகளை எடுக்க முடியுமோ அவ்வளவு எடுக்க வேண்டும். உடலை நீரேற்றத்துடன் வைத்திருக்க வேண்டியது மிக முக்கியமான ஒன்று. முடிந்தவரையிலும் நீர் ஆகாரங்களான பழச்சாறுகள், சூப் ஆகியவற்றை அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும். தீவிர அறிகுறிகள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவமனையை நாட வேண்டும்.
இதையும் படிங்க : நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க இந்த உணவுகளையெல்லாம் சாப்பிடுங்க

