சின்னத்திரை வரலாற்றில் மிகவும் பிரபலமான பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி, தற்போது பொழுதுபோக்கையும் தாண்டி தமிழக அரசியல் களத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. இந்நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வரும் பிரபல நடிகர் விஜய் சேதுபதி பேசிய சில கருத்துகள், தமிழக வெற்றிக் கழக ஆதரவாளர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
பிக்பாஸ் மேடையில் கிளம்பிய சர்ச்சை
பிக்பாஸ் வீட்டின் முதல் கேப்டனாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட போட்டியாளர் ஷாதிகாவிடம் உரையாடிய தொகுப்பாளர் விஜய் சேதுபதி, தலைவருக்கான பொறுப்புகள் குறித்துச் சில கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.
அப்போது அவர், “நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளைக் கொடுக்கக் கூடாது. பிரச்சனை என்று வரும்போது, அதை எதிர்கொள்ளாமல் எதிர்த்தரப்பினர் மீது பழியைப் போட்டுவிட்டு ஓடிவிடுவதோ அல்லது விலகிக் கொள்வதோ ஒரு சிறந்த தலைவருக்கு அழகல்ல” என்று பேசினார்.
இந்த உரையாடலின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, தவெக ஆதரவாளர்கள் சிலர், இந்தக் கருத்துகள் மறைமுகமாக தங்களது தலைவரான முதல்வர் விஜய்யை விமர்சனம் செய்துள்ளதாக கருதி விஜய் சேதுபதியை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.
விஜய் சேதுபதி – முதல்வர் விஜய் திரை நட்பு
விஜய் சேதுபதி பேசும் போது முதலமைச்சர் விஜய் பெயரையோ அல்லது எந்த ஒரு அரசியல் கட்சி பெயரையோ அவர் குறிப்பிட்டு சொல்லவில்லை. மேலும், ‘மாஸ்டர்’ திரைப்படத்தில் முதல்வர் விஜயுடன் இணைந்து நடித்த விஜய் சேதுபதி, பல பொது மேடைகளில் அவரை “அண்ணா” என்று அன்போடு அழைத்து வந்துள்ளார். எனவே விஜய் சேதுபதி முதலமைச்சர் விஜய்யை விமர்சிக்க வாய்ப்பில்லை என கருத்து மோதல்கள் சமூக வலைதளங்களில் நடந்து வருகிறது.
இயக்குநர் சீனு ராமசாமியின் உருக்கமான பதிவு
இந்த விவகாரத்தில் நடிகர் விஜய் சேதுபதிக்கு ஆதரவாக இயக்குனர் சீனு ராமசாமி தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது:
“பிக்பாஸ் நிகழ்ச்சியை கொஞ்சம் அரசியல் சாயம் பூசி விட்டால் மக்களின் கவனத்தை பெற்று விடலாம் என்று அதை நடத்துபவர்கள் நினைத்திருக்கலாம். ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சியில் சொல்லப்படும் ஒரு வசனத்தை எடுத்துக் கொண்டு இவ்வளவு தீவிரமாக எதிர்வினையாற்ற வேண்டிய அவசியம் இல்லை என்று நான் நினைக்கிறேன். அதை வைத்து அவரைத் தனிப்பட்ட முறையில் தாக்குவது என்பது மிகவும் வருத்தமாக இருக்கிறது.
இமேஜ் பார்க்காமல் வில்லனாகவும் நடித்தவர், நிறைய புதிய இயக்குநர்களோடு பயணித்தவர், 100 மூத்த திரைத் தொழிலாளர்களுக்கு 100 சவரன் தங்கம் தந்தவர், பல படங்கள் சிக்கலில் இருந்தபோது தன் சம்பளத்தை விட்டுக்கொடுத்து உதவியவர்.
எனவே, அவசரப்பட்டு விஜய் சேதுபதியைத் தனிப்பட்ட முறையில் யாரும் தாக்க வேண்டாம்” என்று சீனு ராமசாமி அன்போடு கேட்டுக்கொண்டுள்ளார்.
டிவி சேனல் விளக்கம்
சர்ச்சை தீவிரமடைந்த நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியை ஒளிபரப்பும் தனியார் தொலைக்காட்சி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. அதில், “பிக் பாஸ் நிகழ்ச்சியில் இடம்பெறும் உரையாடல்கள் முற்றிலும் பொழுதுபோக்கு சார்ந்தவை மட்டுமே. நிகழ்ச்சிக்கு வெளியே உள்ள நபர்களையோ, அரசியல் இயக்கங்களையோ மையப்படுத்தி இவை பேசப்படவில்லை” என்று முற்றுப்புள்ளி வைக்க வைத்தது.

