தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடந்து முடிந்த சட்டசபை தேர்தல் முடிவுகள் மே மாதம் வெளியானது. அப்போது யாரும் எதிர்பாராத விதமாக விஜய் தலைமையிலான தவெக 108 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இதையடுத்து காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக, ஐயுஎம்எல் போன்ற கட்சிகளின் ஆதரவுடன் த.வெ.க. அரசு பொறுப்பேற்றது.
அண்மை காலத்தில் சரத், ஜெகதீஸ்வரி, கீர்த்தனா, பார்த்திபன், நிர்மல்குமார் உள்பட சில அமைச்சர்கள் மீது சமூகவலைத்தளங்களில் விமர்சனங்கள் அதிகமாக எழுந்து வருகின்றன.அதில் சில அமைச்சர்களின் செயல்பாடுகள் விஜய்க்கு திருப்திகரமாக இல்லையாம். அதேபோல் சில அமைச்சர்கள் மீது அதிருப்தியிலும் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த சூழலில், தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்வது குறித்து முதலமைச்சர் விஜய் தீவிர ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக அமைச்சர்களின் செயல்பாடுகள் அதிருப்தி ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், அதனை கருத்தில் கொண்டு மாற்றங்கள் செய்யப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அமைச்சரவையில் ஒருவர் கூட ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகக்கூடாது என்பதில் அவர் கவனம் செலுத்தி வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அமைச்சரவை மாற்றம் குறித்த இறுதி முடிவு அதற்குப் பிறகு வெளியாகலாம் என கூறப்படுகிறது. அமைச்சரவையில் மாற்றம் ஏற்பட்டால், சில அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றப்படுவதுடன், புதியவர்களுக்கும் பொறுப்புகள் வழங்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரங்களில் நிலவி வருகிறது.
தமிழக அரசின் பல்வேறு திட்டங்கள் அடுத்த கட்டமாக செயல்படுத்தப்பட உள்ள நிலையில், அமைச்சர்களின் செயல்பாடுகள் மீதான முதலமைச்சரின் கண்காணிப்பு அதிகரித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, அரசின் திட்டங்களை செயல்படுத்துவதில் துறை அமைச்சர்களின் பங்களிப்பு, சட்டப்பேரவையில் அவர்கள் அளிக்கும் பதில்கள் மற்றும் துறை சார்ந்த செயல்பாடுகள் ஆகியவை கவனத்தில் கொள்ளப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனால், தமிழக அமைச்சரவையில் மாற்றம் வருமா, யார் யாருக்கு இலாகா மாற்றம் ஏற்படும், புதியவர்கள் அமைச்சரவையில் இடம்பெறுவார்களா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

