மத்திய பிரதேசத்தின் இந்தூரைச் சேர்ந்த 31 வயது இளைஞர் ஒருவர் ஒரு மாதத்துக்கும் மேலாக காய்ச்சல், தலைவலி மற்றும் உடல்வலியால் அவதிப்பட்டுள்ளார். இதற்காக மருத்துவர் ஆலோசனையின்றி தொடர்ந்து வலி நிவாரண மாத்திரைகளை சாப்பிட்டுள்ளார். 30 நாட்களில் 13 மாத்திரைகள் சாப்பிட்டதால் அவருக்கு கடுமையான சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டுள்ளது.
நிலைமை மோசமடைந்ததை தொடர்ந்து சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலைக்கு ஆளாகியுள்ளார். அவரது தாயார் தனது சிறுநீரகங்களில் ஒன்றை தானமாக வழங்கியதாக கூறப்படுகிறது.
வலி நிவாரண மாத்திரைகள் சிறுநீரகத்தை பாதிக்குமா?
வலி மற்றும் வீக்கத்தை குறைப்பதற்காக பயன்படுத்தப்படும் சில மருந்துகள், அளவுக்கு அதிகமாகவோ அல்லது நீண்ட காலமாகவோ எடுத்துக்கொள்ளும்போது சிறுநீரக பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.
இதையும் படிங்க : இந்த அறிகுறிகள் இருந்தால் கவனமா இருங்க., கல்லீரல் பாதிப்பாக இருக்கலாம்..!
இந்த மருந்துகள் சிறுநீரகங்களுக்கு செல்லும் ரத்த ஓட்டத்தை குறைக்கக்கூடும். இதனால் சிறுநீரகங்களின் இயல்பான செயல்பாடு பாதிக்கப்படலாம். நீண்ட காலமாக இதுபோன்ற மருந்துகளை சாப்பிடும் போது சிறுநீரகம் வேகமாக பாதிக்கும்.
சிறுநீரக பாதிப்பின் அறிகுறிகள் என்ன?
சிறுநீரக பாதிப்பு ஆரம்ப கட்டத்தில் வெளிப்படையான அறிகுறிகள் தெரியாமல் இருக்கலாம். பாதிப்பு அதிகமாகும் போது கணுக்கால்களில் வீக்கம், சிறுநீர் மாற்றம், அதிக சோர்வு, குமட்டல், வாந்தி, பசியின்மை
மூச்சுத்திணறல் உள்ளிட்ட சில அறிகுறிகள் தோன்றும். இத்தகைய அறிகுறிகள் ஏற்பட்டால் உடனே மருத்துவ பரிசோதனை மேற்கொள்வது அவசியம். வலி நிவாரண மருந்துகளை அதிகமாக பயன்படுத்துவது சிறுநீரகத்தை மட்டுமல்லாமல் பிற உறுப்புகளையும் பாதிக்கக்கூடும்.
வலி மாத்திரைகளை பாதுகாப்பாக பயன்படுத்துவது எப்படி?
மருத்துவர் பரிந்துரைத்த அளவு மற்றும் கால அளவுக்கு மட்டுமே மருந்துகளை பயன்படுத்த வேண்டும். ஒரே நேரத்தில் பல்வேறு மருந்துகளை மருத்துவ ஆலோசனையின்றி சேர்த்து எடுத்துக்கொள்வதை தவிர்க்க வேண்டும்.
உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக்கொள்வதும் முக்கியம். சில நாட்களாக காய்ச்சல், தலைவலி அல்லது உடல்வலி தொடர்ந்து நீடித்தால், மாத்திரைகளை தொடர்ந்து எடுத்துக்கொள்வதற்கு பதிலாக மருத்துவரின் ஆலோசனை பெறுவது முக்கியம்.
இதையும் படிங்க : உயர் ரத்த அழுத்தம் எதனால் ஏற்படுகிறது? எப்படி குறைப்பது?

