உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரும், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரியுமான எலான் மஸ்க், இன்ஸ்டாகிராம் குறித்து தெரிவித்துள்ள கருத்து சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இன்ஸ்டாகிராம் செயலியை உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த சூழலில் “இன்ஸ்டாகிராம் பெண்களுக்கானது” என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். அவர் பதிவிட்ட கருத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் பலரும் தங்களது கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.
எலான் மஸ்க் கூறியது என்ன?
அக்டோபர் 1-ம் தேதி, Geiger Capital என்ற பெயரில் இயங்கும் எக்ஸ் தளப் பயனர் ஒருவர் தனது இன்ஸ்டாகிராம் கணக்கை நீக்கிவிட்டதாகப் பதிவிட்டிருந்தார். இன்ஸ்டாகிராம் அடிப்படையிலேயே பெண்களுக்கான செயலி என்றும், அதனால் தனக்கு எந்தப் பயனும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்தப் பதிவுக்குப் பதிலளித்த எலான் மஸ்க், “Instagram is for girls” (இன்ஸ்டாகிராம் பெண்களுக்கானது) என்று சுருக்கமாகப் பதிவிட்டார். எலான் மஸ்க்கின் இந்தப் பதில் இணையத்தில் வேகமாகப் பரவியது. இதையடுத்து பலரும் தங்களது கருத்துகளைப் பகிரத் தொடங்கினர்.
இணையத்தில் பரவும் கருத்துக்கள்
இன்ஸ்டாகிராம் என்பது பெண்களுக்கு தளம் கிடையாது என்றும், ஆண்கள், பெண்கள் என அனைத்து தரப்பினரும் பயன்படுத்தும் பொதுவான சமூக வலைதளம் என பலர் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். சில பயனர்கள், சமூக வலைதளங்களைக்கூட பாலின அடிப்படையில் பிரிக்க வேண்டுமா என்று கேள்வி எழுப்பினர். இன்னும் சிலர், எக்ஸ் தளம் யாருக்கானது என்ற கேள்வியையும் முன்வைத்தனர்.

