பொங்கல் அரிசி திட்டம், தீபாவளி பட்டாசு சீட்டு, ஏலச் சீட்டு மற்றும் பணம் சேமிப்புத் திட்டங்கள் மூலம் பொதுமக்களிடம் பணம் வசூலித்து ஏமாற்றியதாக வேலூர் மாவட்ட ஆட்சியரிடம் 50-க்கும் மேற்பட்டோர் புகார் மனு அளித்துள்ளனர்.
வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த காட்பாடி சாலை காந்திநகர் அருகே செயல்பட்டு வந்ததாகக் கூறப்படும் ஆதி பகவான் நிறுவனம் தொடர்பாக இந்தப் புகார் எழுந்துள்ளது. கடந்த 2024 முதல் 2025ஆம் ஆண்டு வரை, தீபாவளி சிறுசேமிப்புத் திட்டம், பொங்கல் அரிசித் திட்டம், பெண்கள் குழுக்கள், ஏலச் சீட்டு மற்றும் வைப்புத் தொகை உள்ளிட்ட திட்டங்களின் பெயரில் பொதுமக்களிடம் பணம் வசூலிக்கப்பட்டதாகப் புகார்தாரர்கள் தெரிவித்துள்ளனர்.
மாதந்தோறும் ரூ.500 வீதம் 10 மாதங்களுக்குப் பணம் செலுத்தினால், மொத்தம் ரூ.5,000 செலுத்திய பிறகு பொங்கலுக்கு அரிசியும், தீபாவளிக்கு பட்டாசுகள் உள்ளிட்ட பொருட்களும் வழங்கப்படும் என்று கூறியதாகப் புகார்தாரர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனை நம்பிப் பலர் மாதந்தோறும் பணம் செலுத்தியதாகக் கூறப்படுகிறது. ஆனால், 10 மாதங்கள் முடிந்த பின்னர் அரிசி மற்றும் பட்டாசுப் பொருட்களைக் கேட்டபோது, அவற்றை வழங்க மறுத்ததாகப் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதையடுத்து, பாதிக்கப்பட்ட 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஒன்றிணைந்து, வேலூர் மாவட்ட ஆட்சியர் லீலா அலெக்ஸ் அவர்களிடம் புகார் மனு அளித்துள்ளனர். தாங்கள் செலுத்திய பணத்தை மீட்டுத் தருவதுடன், சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புகார் மனுவைப் பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர், அதன் மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்ததாகப் புகார்தாரர்கள் கூறியுள்ளனர்.

