சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாள்களாக இரவு நேர மின்வெட்டு காரணமாக மக்கள் கடும் அவதியடைந்துள்ளனர். இந்த தொடர் மின்வெட்டைக் கண்டித்து மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆவடியில் துணை மின் நிலையம் முற்றுகை
ஆவடி, திருவேற்காடு, அயப்பாக்கம், பூந்தமல்லி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த புதன்கிழமை இரவு மின்வெட்டு ஏற்பட்டது. குறிப்பாக ஆவடி மற்றும் திருவேற்காடு துணை மின் நிலையங்களின் கட்டுப்பாட்டில் உள்ள வீட்டு வசதி வாரியம், பருத்திப்பட்டு, கோவர்தனகிரி, காமராஜர் நகர் உள்ளிட்ட பகுதிகளும் மின்வெட்டால் பாதிக்கப்பட்டன.
இரவு சுமார் 10.30 மணிக்கு அடிக்கடி மின்தடை ஏற்படுவதாகக் கூறி, ஆவடியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் துணை மின் நிலையத்தை முற்றுகையிட்டனர். அப்போது அதிகாரிகளிடம் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். இதையடுத்து, இரவு 11.30 மணியளவில் மின் விநியோகம் சீரானதால் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
ஸ்ரீபெரும்புதூர் துணை மின் நிலையத்தில் இருந்து திருவேற்காடு நோக்கி வரும் 230 கிலோவோல்ட் திறன் கொண்ட மின் பாதையில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக மின்வெட்டு ஏற்பட்டதாக மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
ராயபுரத்தில் சாலை மறியல்
இதனை தொடர்ந்து, சென்னையின் ராயபுரம் பகுதியிலும் தொடர் மின்வெட்டைக் கண்டித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மின்வெட்டு பிரச்சனையால் தொடர்ந்து பாதிக்கப்படுவதாகக் கூறி அவர்கள் போராட்டம் நடத்தினர். மேலும், ராயபுரம் தொகுதி தவெக எம்எல்ஏ விஜய் தாமுவுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
வண்ணாரப்பேட்டையிலும் போராட்டம்
சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியிலும் மின்வெட்டு காரணமாக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு மின்வாரிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தொடர்ந்து வரும் மின்வெட்டு புகார்கள்
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்வெட்டு தொடர்பாக மக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். மின்வெட்டு ஏற்படும் நேரம் மற்றும் மின்சாரம் மீண்டும் வழங்கப்படும் நேரம் குறித்த தகவல்கள் கிடைக்கவில்லை என குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர்.

