குஜராத்தில் பயங்கரம் : வியாபாரியைச் சுட்டுக் கொன்று ரூ.1.5 கோடி தங்கம், வெள்ளி கொள்ளை

குஜராத்தில் வியாபாரியைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்று சுமார் ரூ.1.5 கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை மர்மநபர்கள் பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பான கண்காணிப்புக் கேமரா காட்சிகள் வெளியாகியுள்ள நிலையில், தப்பியோடிய கொள்ளையர்களைப் பிடிக்க போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள தன்வி கோல்டு நிறுவனத்தில் பணியாற்றி வந்தவர் லால்ஜிபாய் சர்தாரா. இவர் நேற்று இரவு தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் அடங்கிய பையுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது, முகமூடி அணிந்து வந்த மர்மநபர்கள், அவரிடம் இருந்த பையை பறித்து சென்றனர்.

நகைப் பையைப் பறிகொடுத்த லால்ஜிபாய், கொள்ளையர்களை பிடிக்க துரத்தி சென்றுள்ளார். அப்போது, கொள்ளையர்களில் ஒருவர் துப்பாக்கியால் அவரை மூன்று முறை துப்பாக்கியால் சுட்டுள்ளார். துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த லால்ஜிபாய் உடனடியாகத் தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், கொள்ளையர்களைக் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். சம்பவம் நடைபெற்ற இடத்தில் உள்ள கண்காணிப்புக் கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.

Saravanan
Saravananhttps://suryamalar.in/
முக்கியமான தமிழ் செய்திகள், தொழில்நுட்பம், சினிமா, சர்வதேச நிகழ்வுகள் மற்றும் மருத்துவம் குறித்த செய்திகளை தொடர்ந்து எழுதி வருகிறேன். நம்பகமான ஆதாரங்களின் அடிப்படையில் துல்லியமான மற்றும் பயனுள்ள தகவல்களை வாசகர்களுக்கு வழங்குவதே எனது நோக்கம்.
HTML tutorial