ஸ்மார்ட்போன்கள் தகவல் தொடர்புக்கு மட்டுமின்றி, இயற்கைப் பேரிடர்களின்போதும் மக்களுக்குப் பயனுள்ளதாக மாறி வருகின்றன. அந்த வகையில், ஆண்ட்ராய்டு செல்போன்கள் மூலம் நிலநடுக்கத்தைக் கண்டறிந்து எச்சரிக்கை வழங்கும் தனது வசதியை கூகுள் விரிவுபடுத்தியுள்ளது.
கூகுள் நிறுவனம் அக்டோபர் 15ஆம் தேதி வெளியிட்ட அறிவிப்பின்படி, ஆண்ட்ராய்டு நிலநடுக்க எச்சரிக்கை அமைப்பு முன்பு 98 நாடுகளில் செயல்பட்டு வந்தது. தற்போது இது 200-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இந்த வசதி 2021ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இதுவரை உலகம் முழுவதும் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு ஒரு பில்லியனுக்கும் அதிகமான எச்சரிக்கைகள் அனுப்பப்பட்டுள்ளதாக கூகுள் தெரிவித்துள்ளது.
செல்போன் எப்படி நிலநடுக்கத்தைக் கண்டறிகிறது?
ஆண்ட்ராய்டு செல்போன்களில் உள்ள Accelerometer நிலநடுக்கத்தின்போது பூமியில் ஏற்படும் அதிர்வுகளை கண்டறிய உதவுகிறது. இந்த அதிர்வு ஒரே பகுதியில் இருந்து பல செல்போன்கள் மூலம் பதிவாகும்போது, அந்தத் தகவல்களை கூகுளின் அமைப்பு ஒன்றிணைத்து நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறதா என்பதை மதிப்பிடுகிறது.
நிலநடுக்க எச்சரிக்கை வந்தால் என்ன செய்ய வேண்டும்?
செல்போனில் நிலநடுக்க எச்சரிக்கை வந்தால், முதலில் பதற்றமடையாமல் உடனடியாகப் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். நிலநடுக்கம் ஏற்பட்டுக்கொண்டிருக்கும்போது அவசரமாக வெளியே ஓட முயற்சிப்பதைத் தவிர்க்க வேண்டும். அதிர்வுகள் நின்ற பிறகு, உள்ளூர் அதிகாரிகள் வழங்கும் பாதுகாப்பு அறிவுறுத்தல்களைப் பின்பற்றுவது அவசியம்.

