எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்ட சம்பவம் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தஞ்சையில் நடைபெற்ற தி.மு.க. ஆர்ப்பாட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் ஆற்றிய பேச்சு சமூக வலைத்தளங்களில் பரவியதைத் தொடர்ந்து அரசியல் சர்ச்சை உருவானது. அந்தப் பேச்சில் முதலமைச்சர் விஜய் மற்றும் நடிகை திரிஷா குறித்து பேசிய பேச்சுக்கு தவெக கண்டனம் தெரிவித்தது.
இதையடுத்து, த.வெ.க. மகளிர் அணி தஞ்சை கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்ததுடன், தேசிய மகளிர் ஆணையத்திலும் புகார் பதிவு செய்யப்பட்டது.
9 பிரிவுகளில் வழக்கு பதிவு
புகாரின் அடிப்படையில், பெண்கள் தொடர்பான சட்டப்பிரிவுகள் உள்ளிட்ட மொத்தம் 9 பிரிவுகளின் கீழ் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, தஞ்சை காவல்துறையினர் சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர், அவரை கைது செய்து விசாரணைக்காக தஞ்சைக்கு அழைத்துச் சென்றனர்.
உதயநிதியை விசாரித்துவிட்டு இன்றே விடுவிக்க வேண்டும். உதயநிதியும் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட்டு கூறியுள்ளது.
“எதிர்க்கட்சிகளின் குரல்வளையை நசுக்கும் செயல்” – டிடிவி தினகரன் கண்டனம்
‘எதிர்க்கட்சித் தலைவர் என்ற பொறுப்புமிக்க பதவியில் இருப்பவர் பொது வெளியில் பொறுப்பற்ற முறையில் பேசியிருப்பது கண்டனத்திற்குரியது. அதே நேரத்தில் உயர் நீதிமன்ற அறிவுறுத்தலையும் மீறி அவரசம் அவசரமாக காவல் துறையை வைத்து தமிழக அரசு உதயநிதி ஸ்டாலினை கைது செய்துள்ள நடவடிக்கையும் கண்டனத்திற்குரியது.
மின்வெட்டு, மின்சார கட்டண உயர்வு, விலைவாசி உயர்வு என தமிழகத்தின் தலையாய பிரச்சினைகளை மறந்து ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் தனிப்பட்ட தாக்குதல்களையும், தரக்குறைவான விமர்சனங்களையும் மற்றும் அதிகார துஷ்பிரயோகங்களையும் முன்னேடுத்துக் கொண்டிருப்பது வருந்ததக்கது என கூறியுள்ளார்.
எதிர்க்கட்சி தலைவரை சிறைப்படுத்துவதை தவிர்க்க வேண்டும் – திருமாவளவன்
எதிர்க்கட்சித் தலைவர் என்கிற பொறுப்பு வாய்ந்த இடத்தில் இருப்பவர் இதுபோல இரட்டை பொருள் தரும் ‘எள்ளல் நடையில்’ பேசும் முறையை தவிர்த்திருக்க வேண்டும். ஒரு பெண்ணை குறித்து இழிவாக பேசும் இத்தகைய அணுகுமுறை அவரது அரசியல் தகுதிக்கு பொருத்தமானதில்லை. நாகரிக அரசியலுக்கு ஏற்புடையதல்ல.
நாளை சட்டமன்றம் கூடும் சூழ்நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பிலிருப்பவரை சிறைப்படுத்துவதை தவிர்ப்பது ஆளுங்கட்சியின் மீதான நன்மதிப்பை உயர்த்தும் என கூறியுள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் கருத்து
எதிர்க்கட்சித் தலைவர் என்ற பொறுப்பு சட்டமன்றத்தின் முக்கிய அங்கம். அந்த பொறுப்பில் உள்ளவர் இல்லாமல் முடக்கிவிட்டு சட்டப்பேரவை நடத்த வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த பொய்க்கால் குதிரை அரசு செயல்படுவது கடும் கண்டனத்திற்குரியது. அதேபோல், நாளை சட்டமன்றக் கூட்டத் தொடர் நடைபெறும் நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் மீதான கைது நடவடிக்கையை உடனடியாக கைவிட வேண்டும் என இந்த அரசை வலியுறுத்துகிறேன்.
இவ்வளவு அவசரமாக கைது செய்ய வேண்டிய தேவை இல்லை – அன்புமணி
உதயநிதி ஸ்டாலினின் பேச்சும், கைது நடவடிக்கையும் கண்டிக்கத்தக்கவை; இரண்டும் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும். தஞ்சாவூர் போராட்டத்தின் போது எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசிய பேச்சு எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாத கண்ணியமற்றதாகும்.
அதே நேரத்தில், உதயநிதி ஸ்டாலினை இவ்வளவு அவசரமாக கைது செய்ய வேண்டிய தேவை இல்லை. தமிழகத்தின் தலையாய பிரச்சினைகளில் கூட காட்டப்படாத அவசரத்தை இந்த கைது நடவடிக்கையில் அரசும், காவல்துறையும் காட்டியதன் பின்னணியில் இருப்பது அரசியல் மட்டும் தான் என கூறியுள்ளார்.
