தங்கத்தை தொடர்ந்து வெள்ளிக்கும் ஹால்மார்க் : அக்டோபர் முதல் மாறப்போகும் விதிமுறை

தங்க நகைகளைப் போலவே வெள்ளி நகைகளுக்கும் ஹால்மார்க் முத்திரையை கட்டாயமாக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி, அக்டோபர் மாதம் முதல் வெள்ளி நகைகளுக்கான ஹால்மார்க் நடைமுறை கட்டாயமாகலாம் என கூறப்படுகிறது.

தங்க நகைகளுக்கு 2021-ம் ஆண்டு ஜூன் முதல் கட்டாய ஹால்மார்க் முறை படிப்படியாக அமல்படுத்தப்பட்டது. இதேபோன்று வெள்ளி நகைகளுக்கும் கட்டாய ஹால்மார்க் முறையை கட்டங்களாக செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வெள்ளி நகைகளின் தரம் மற்றும் தூய்மையை உறுதி செய்வது தொடர்பாக அரசு இந்த நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

ஹால்மார்க் நடைமுறை மூலம் வாடிக்கையாளர்கள் தாங்கள் வாங்கும் நகையின் உண்மையான தூய்மை அளவை அறிந்துகொள்ள முடியும். இதனால் குறைந்த தரம் கொண்ட பொருளை அதிக தூய்மை கொண்ட வெள்ளி நகையாக விற்பனை செய்வதை கட்டுப்படுத்த முடியும். நகையை பின்னர் விற்பனை செய்யும்போதோ அல்லது மாற்றிக் கொடுக்கும்போதோ அதன் உண்மையான தூய்மை அடிப்படையில் மதிப்பிடுவதற்கு இது உதவும்.

புதிய தரநிலையின்படி வெள்ளி நகைகளுக்கு 800, 835, 925, 958, 970, 990 மற்றும் 999 என 7 தூய்மை அளவுகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

வெள்ளி நகைகளுக்கு ஹால்மார்க் கட்டாயமாக்கப்பட்டால், நகைக்கடைகள் மற்றும் உற்பத்தியாளர்கள் தங்களது பொருட்களை அங்கீகரிக்கப்பட்ட பரிசோதனை மற்றும் ஹால்மார்க் மையங்கள் மூலம் சான்றளிக்க வேண்டிய நிலை ஏற்படும்.

Saravanan
Saravananhttps://suryamalar.in/
முக்கியமான தமிழ் செய்திகள், தொழில்நுட்பம், சினிமா, சர்வதேச நிகழ்வுகள் மற்றும் மருத்துவம் குறித்த செய்திகளை தொடர்ந்து எழுதி வருகிறேன். நம்பகமான ஆதாரங்களின் அடிப்படையில் துல்லியமான மற்றும் பயனுள்ள தகவல்களை வாசகர்களுக்கு வழங்குவதே எனது நோக்கம்.
HTML tutorial