சென்னையில் இரவு முழுவதும் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்துள்ளது. வடபழனி, சைதாப்பேட்டை, ஆலந்தூர் உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்துள்ள நிலையில், சென்னையில் மீண்டும் மழை தொடர வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக சென்னை எம்.ஜி.ஆர் நகரில் 15 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
சென்னையில் மழை பதிவான பகுதிகள்
எம்.ஜி.ஆர் நகர் 15 செ.மீ வடபழனி 14 செ.மீ சைதாப்பேட்டை 13 செ.மீ ஆலந்தூர் 13 செ.மீ காஞ்சி கொளப்பாக்கம் 13 செ.மீ மீனம்பாக்கம் 12 செ.மீ மடிப்பாக்கம் 12 செ.மீ வளசரவாக்கம் 12 செ.மீ நுங்கம்பாக்கம் 12 செ.மீ மதுரவாயல் 12 செ.மீ மழை பதிவாகி உள்ளது.
சென்னையில் மீண்டும் கனமழை
சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களான திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் இரவு முழுவதும் விட்டுவிட்டு மழை பெய்துள்ளது. சென்னையின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப் பகுதிகளில் வளிமண்டலச் சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழை?
அக்டோபர் 21ஆம் தேதியான இன்று, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளது. அப்போது மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், நாமக்கல், கரூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை எந்தெந்த மாவட்டங்களில் கனமழை?
அக்டோபர் 22ஆம் தேதி தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும்.
நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, அரியலூர், கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

