கடலூர் மாவட்டம் மற்றும் புதுச்சேரி எல்லைப் பகுதியில் அமைந்துள்ள சிங்கிரிகுடி லட்சுமி நரசிம்மர் கோயில், தமிழகத்தின் புகழ்பெற்ற நரசிம்மர் தலங்களில் ஒன்றாக விளங்குகிறது. புராணங்களில் கிருஷ்ணாரண்ய க்ஷேத்திரம் என அழைக்கப்படும் இத்தலம், வரலாற்று மற்றும் ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்த புனித ஸ்தலமாக கருதப்படுகிறது.
சுமார் 2,000 ஆண்டுகள் பழமையான இந்த கோயில், பல்லவர் காலத்தில் உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் சோழ மன்னர் இராஜராஜ சோழனும், விஜயநகரப் பேரரசர் கிருஷ்ணதேவராயரும் பல திருப்பணிகளை மேற்கொண்டுள்ளனர். ஆற்காடு நவாப் மற்றும் பிரெஞ்சு அதிகாரிகளும் இக்கோயிலுக்கு அணிகலன்கள் வழங்கியதாக வரலாற்றுச் சான்றுகள் தெரிவிக்கின்றன.
16 திருக்கரங்களுடன் அருள்பாலிக்கும் உக்கிர நரசிம்மர்
சிங்கிரிகுடி கோயிலின் மிகப்பெரிய சிறப்பு, ஒரே கருவறையில் மூன்று நரசிம்மர் வடிவங்கள் அருள்பாலிப்பதாகும். இங்கு மூலவராக இருக்கும் லட்சுமி நரசிம்மர், இரண்யகசிபுவை வதம் செய்யும் உக்கிர தோற்றத்தில் 16 திருக்கரங்களுடன் மேற்கு நோக்கி காட்சியளிக்கிறார். இந்தியாவில் இவ்வகை அரிய திருக்கோலத்தில் நரசிம்மர் அருள்பாலிக்கும் தலங்கள் மிகவும் குறைவாக உள்ளன.
அதே கருவறையில் யோக நரசிம்மர் மற்றும் பால நரசிம்மரும் பக்தர்களுக்கு தரிசனம் அளிக்கின்றனர். உக்கிர தோற்றத்தில் காட்சியளித்தாலும், பக்தர்களின் வேண்டுதல்களை கருணையுடன் நிறைவேற்றும் தெய்வமாக நரசிம்மர் போற்றப்படுகிறார்.
இதையும் படிங்க : புற்றுமண்ணை பிரசாதமாக எடுத்துச் செல்லும் பக்தர்கள் ; அப்படி என்ன இருக்கு அதுல?
புராண சிறப்பு
ஸ்தல புராணத்தின் படி, நிமி சக்ரவர்த்தியும் வசிஷ்ட முனிவரும் சாப விமோசனம் பெற இத்தலத்தில் தவம் மேற்கொண்டதாக கூறப்படுகிறது. அவர்களின் பக்தியில் மகிழ்ந்த நரசிம்மர் காட்சி அளித்து அருள் புரிந்ததாக நம்பப்படுகிறது. மேலும், பக்த பிரகலாதனும் இத்தலத்திற்கு வந்து நரசிம்மரை வழிபட்டதாக புராணங்கள் குறிப்பிடுகின்றன.
பக்தர்களின் நம்பிக்கை
நவக்கிரக தோஷ நிவர்த்தி தலமாக விளங்கும் இக்கோயிலில், திருமணத் தடை, குழந்தைப் பேறு தாமதம், கடன் பிரச்சினை, எதிரிகளின் தொல்லை, மனஅழுத்தம் உள்ளிட்ட பல்வேறு குறைகள் நீங்க வேண்டி பக்தர்கள் வழிபடுகின்றனர். செவ்வாய்க்கிழமைகளில் நெய்தீபம் ஏற்றி, துளசி அர்ச்சனை செய்வது சிறப்பு பரிகாரமாக கருதப்படுகிறது.
திருவிழாக்கள்
சித்திரை மற்றும் வைகாசி மாதங்களில் நடைபெறும் பிரம்மோத்சவம், நரசிம்ம ஜெயந்தி தேர்த்திருவிழா, ஐப்பசி பவித்ர உற்சவம், வைகுண்ட ஏகாதசி கருட சேவை, மாசி மகம் தீர்த்தவாரி உள்ளிட்ட பல்வேறு திருவிழாக்கள் ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறுகின்றன.
எப்படி செல்லலாம்?
புதுச்சேரியில் இருந்து கடலூர் செல்லும் சாலையில் தவளக்குப்பம் அருகே சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் சிங்கிரிகுடி லட்சுமி நரசிம்மர் கோயில் அமைந்துள்ளது. புதுச்சேரி மற்றும் கடலூரிலிருந்து பேருந்து வசதிகளும் உள்ளன.

