வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களான NRI-களும் ஆதார் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம். இதற்காக 182 நாட்கள் இந்தியாவில் வசித்திருக்க வேண்டும் என்ற விதி NRI-களுக்கு பொருந்தாது என்று இந்திய தனித்துவ அடையாள ஆணையமான UIDAI தெரிவித்துள்ளது.
இந்திய பாஸ்போர்ட் வைத்திருக்கும் NRI, இந்தியாவுக்கு வந்தவுடன் ஆதார் பதிவு செய்யும் நடைமுறையை தொடங்கலாம். அதாவது, ஆதார் பெறுவதற்காக இந்தியாவில் தொடர்ந்து 182 நாட்கள் தங்கியிருக்க வேண்டிய அவசியம் இல்லை.
வெளிநாட்டில் இருந்தபடியே விண்ணப்பிக்க முடியுமா?
ஆதார் விண்ணப்பத்தை வெளிநாட்டில் இருந்தபடியே முழுமையாக ஆன்லைனில் முடிக்க முடியாது. விண்ணப்பதாரர் இந்தியாவில் உள்ள ஆதார் பதிவு மையத்திற்கு நேரில் சென்று, அங்கு புகைப்படம், கைரேகைகள் மற்றும் இரு கண்களின் கருவிழி உள்ளிட்ட பயோமெட்ரிக் தகவல்களை பதிவு செய்ய வேண்டும்.
எந்த ஆவணங்கள் தேவை?
NRI விண்ணப்பதாரருக்கு செல்லுபடியாகும் இந்திய பாஸ்போர்ட் முக்கியமான அடையாளச் சான்றாகும். UIDAI விதிமுறைகளின்படி, இந்திய பாஸ்போர்ட் NRI விண்ணப்பதாரரின் அடையாளச் சான்றாக உள்ளது.
விண்ணப்பத்தின் போது பெயர், பிறந்த தேதி, பாலினம், முகவரி மற்றும் மின்னஞ்சல் போன்ற விவரங்கள் பதிவு செய்யப்படுகின்றன. மொபைல் எண் வழங்க வேண்டும். பாஸ்போர்ட்டில் உள்ள முகவரிக்கு பதிலாக வேறு இந்திய முகவரியை ஆதார் அட்டையில் பதிவு செய்ய விரும்பினால், அதற்கான செல்லுபடியாகும் முகவரிச் சான்றை வழங்கலாம்.
வெளிநாட்டு முகவரியை ஆதாரில் பதிவு செய்ய முடியுமா?
NRI-யின் பாஸ்போர்ட்டில் வெளிநாட்டு முகவரி குறிப்பிடப்பட்டிருந்தாலும், அந்த முகவரியுடன் ஆதார் பதிவு செய்யும் வசதி உள்ளது என்று UIDAI தெரிவித்துள்ளது. அவ்வாறு வெளிநாட்டு முகவரியுடன் ஆதார் பதிவு செய்யப்பட்டால், e-Aadhaar பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்.
NRI-கள் விண்ணப்பிப்பது எப்படி?
முதலில் அருகிலுள்ள ஆதார் பதிவு மையத்தை கண்டறிந்து, தேவையான பதிவு படிவத்துடன் செல்ல வேண்டும். செல்லுபடியாகும் இந்திய பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
அதன்பிறகு பதிவு மையத்தில் விண்ணப்பதாரரின் தனிப்பட்ட தகவல்கள் பதிவு செய்யப்படும். புகைப்படம், 10 விரல்களின் கைரேகைகள் மற்றும் இரு கண்களின் கருவிழி உள்ளிட்ட பயோமெட்ரிக் தகவல்களும் சேகரிக்கப்படும்.
பதிவு முடிந்ததும் விண்ணப்பதாரருக்கு ஒப்புகைச் சீட்டு வழங்கப்படும். அதைப் பயன்படுத்தி விண்ணப்பத்தின் நிலையை தொடர்ந்து அறிந்துகொள்ளலாம்.
வெளிநாட்டு மொபைல் எண்ணை வழங்கலாமா?
NRI-கள் தங்களுடைய சர்வதேச மொபைல் எண்ணையும் ஆதார் விவரங்களில் பதிவு செய்யலாம். ஆனால் இந்தியாவுக்கு வெளியேயுள்ள மொபைல் எண்ணுக்கு ஆதார் தொடர்பான SMS செய்திகள் அனுப்பப்படாது என்று UIDAI தெரிவித்துள்ளது.

