திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தனி சட்டமன்றத் தொகுதியில் அக்டோபர் 6ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி திமுக, அதிமுக, தமிழக வெற்றிக் கழகம், நாம் தமிழர் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய பிரதான கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் சத்தியபாமாவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதனால் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அவர் வாக்கு சேகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
கண்ணீர் விட்ட சத்யபாமா
இந்த சூழலில், நேற்று நடைபெற்ற தாராபுரம் இடைத்தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் தவெக வேட்பாளர் சத்யபாமா மேடையிலேயே கண்ணீர் விட்டு அழுத சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் பேசும் போது அருகில் இருந்த முதலமைச்சர் விஜய் அவரைத் தேற்றிய காட்சிகளும் இணையத்தில் பரவின.
சத்யபாமா கண்ணீர் விடுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு அமைச்சர் ராஜ்மோகன் அவரிடம் காதில் ஏதோ கூறிய காட்சி சமூக வலைதளங்களில் பரவியது. இது தொடர்பாக பல்வேறு கருத்துக்கள் பேசப்பட்டது. குறிப்பாக, அமைச்சர் ராஜ்மோகன் ஏதேனும் சொன்ன பிறகுதான் சத்யபாமா உணர்ச்சிவசப்பட்டாரா என்ற விவாதம் நடந்து வருகிறது.
அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்
இந்த விவகாரம் குறித்து அமைச்சர் ராஜ்மோகன் அளித்த விளக்கத்தில், சத்யபாமாவிடம் வேறு எந்த தகவலும் தெரிவிக்கவில்லை என்று கூறியுள்ளார்.
தேர்தல் பிரச்சாரம் நீண்ட நேரம் நடைபெற்றதால், முதலமைச்சர் விஜய் மற்றும் பொதுமக்கள் நீண்ட நேரமாகக் காத்திருந்ததாகவும், எனவே உரையைச் சுருக்கமாக முடிக்குமாறு சத்யபாமாவிடம் கூறினேன்.
மேலும், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களும் விரைவாகப் பேசித் தேர்தல் பிரச்சாரத்தை முடிக்குமாறு கேட்டுக்கொண்டனர். என் தாயின் மீது ஆணையாகச் சொல்கிறேன். மேடையில் நடந்தது இதுதான். ஆனால் அரசியல் காரணங்களுக்காக இதனை எதிர்கட்சிகள் திரித்து பேசுவதையும் ஆதாரம் இல்லாமல் சொல்வதையும் வன்மையாக கண்டிக்கிறேன்” என அவர் கூறியுள்ளார்.

