தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கர்நாடகாவில் பட்டாசு வெடிப்பதற்கு புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இரவு 8 மணி முதல் 10 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், பட்டாசுகளால் ஏற்படும் காற்று மற்றும் ஒலி மாசுபாட்டைக் கட்டுப்படுத்த கர்நாடக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
இந்நிலையில், கர்நாடக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி இன்று புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளார். அதன்படி, மாநிலம் முழுவதும் இரவு 8 மணி முதல் 10 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தீபாவளியின்போது அரசு அனுமதி பெற்ற பசுமைப் பட்டாசுகளை மட்டுமே விற்பனை செய்யவும் பயன்படுத்தவும் வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு அறிவிக்கும் தடை செய்யப்பட்ட பகுதிகளுக்கு அருகில் பட்டாசு வெடிக்க அனுமதி கிடையாது. மேலும், பட்டாசு வெடிக்கும்போது குழந்தைகள், வயதானவர்கள், நோயாளிகள் மற்றும் விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பொதுமக்கள் கவனமாகச் செயல்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

