செயற்கை நுண்ணறிவு உருவாக்கிய தவறான உளவுத்தகவல் காரணமாக, மத்திய கிழக்கில் சென்றுகொண்டிருந்த சீனக் கப்பலை அமெரிக்க ராணுவம் இடைமறித்து சோதனை செய்யும் நடவடிக்கைக்கு தயாரான சம்பவம் தற்போது வெளியாகியுள்ளது. ஈரானுடனான போரின் போது இந்தச் சம்பவம் நடந்ததாக பிரபல செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
AI கொடுத்த தவறான தகவல்
சீனக் கப்பல் ஒன்றில் அணு ஆயுதத் தயாரிப்புடன் தொடர்புடைய பாகங்கள் இருப்பதாக அமெரிக்க ராணுவத்துக்குள் ஓர் உளவுத்தகவல் பரவியது. இந்த தகவல் அமெரிக்க ராணுவத்தின் பல்வேறு பிரிவுகளுக்கு சென்றது. தகவலின் அடிப்படையில் அந்தக் கப்பலை தடுக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. ஆயுதம் ஏந்திய ராணுவ வீரர்கள் கப்பலில் ஏறுவதற்குத் தயாராக இருந்தனர்.
AI எப்படி தவறான தகவலை உருவாக்கியது?
அந்த உளவுத்தகவல் அறிக்கையை தயாரித்தவர் அமெரிக்க சிறப்பு நடவடிக்கைப் பிரிவுடன் தொடர்புடைய ஓர் ஆய்வாளர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனக் கப்பலின் சரக்கு விவரங்கள் தொடர்பான தகவல்களை ஆய்வு செய்ய அவர் AI பயன்படுத்தி உள்ளார். ஆனால் அந்த AI, கப்பலில் இருந்த பொருட்களை தவறாக எடுத்துக்கொண்டு, முடிவுகளை அடிப்படையாகக் கொண்டு வழக்கமான ராணுவ உளவுத்தகவல் அறிக்கை போன்ற வடிவத்திலும் தயாரித்து கொடுத்துள்ளது.
கடைசி நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட தவறு
கப்பலுக்கு எதிரான நடவடிக்கை தொடங்குவதற்கு சற்று முன்பாக அதிகாரிகள் அந்த உளவுத்தகவலை ஆய்வு செய்துள்ளனர். அப்போது அறிக்கையை உருவாக்குவதில் AI பயன்படுத்தப்பட்டதும், கப்பலின் சரக்குகளை AI தவறாக அடையாளம் கண்டதும் தெரிய வந்தது.
இந்த அறிக்கை முற்றிலும் தவறானது என்று சம்பவத்தை அறிந்த ஒருவர் கூறியுள்ளார். ஒரு வேளை, சீனக் கப்பலுக்கு எதிராக அமெரிக்க ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தால், அது இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றத்தை மேலும் அதிகரித்திருக்கக்கூடும் என தெரிவித்தார்.

