நாட்டின் முன்னணி விமான நிறுவனங்களில் ஒன்றான இண்டிகோ, உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களுக்கான டிக்கெட் கட்டணத்தை மீண்டும் உயர்த்தியுள்ளது. இந்த புதிய கட்டணம் அக்டோபர் 6ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
உள்நாட்டு விமானங்களில் ஒரு பயணிக்கு ரூ.100 முதல் ரூ.350 வரை எரிபொருள் கட்டணம் உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக 2,000 கி.மீ.க்கு மேற்பட்ட பயணங்களுக்கு ரூ.950-ல் இருந்து ரூ.1,300 ஆக உயர்த்தபட்டுள்ளது. சர்வதேச வழித்தடங்களிலும் ரூ.1,000 முதல் ரூ.10,000 வரை உயர்த்தபட்டுள்ளது.
சர்வதேச கச்சா எண்ணெய் விலை, மேற்காசியாவில் நிலவும் அரசியல் சூழல் காரணமாக விமான எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் விமான எரிபொருள் விலை 14 சதவீதத்துக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக டிக்கெட் விலை உயர்த்தபட்டுள்ளது.
இண்டிகோ நிறுவனம் கடந்த மார்ச் மாதத்தில் முதல் முறையாக எரிபொருள் கட்டணத்தை உயர்த்தியது. அதன்பின்னர் ஏப்ரல் மாதத்திலும் கட்டணம் மாற்றியமைக்கப்பட்டது. தற்போது மீண்டும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால் விமான பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

