அணு ஆயுதப் போர் மற்றும் செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாடு காரணங்களால் 2100-ம் ஆண்டுக்குள் மனிதகுலத்திற்கு மிகப்பெரிய ஆபத்து ஏற்படும் என ‘தி லான்செட்’ மருத்துவ ஆய்விதல் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தொழில்நுட்ப வளர்ச்சி, மருத்துவ முன்னேற்றம் மற்றும் பொருளாதார மாற்றம் என உலகம் நோக்கி வேகமாகச் சென்றுகொண்டிருக்கும் நிலையில், அணு ஆயுதப் போர் மற்றும் செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாடு ஆகியவை இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் மனிதர்களின் உயிர்வாழ்வையே பாதிக்கக்கூடும் என்று புதிய ஆய்வறிக்கை எச்சரித்துள்ளது.
அணு ஆயுதப் போரில் உள்ள ஆபத்து
பெரிய அளவிலான அணு ஆயுதப் போர் நடைபெறும் போது, வளிமண்டலத்தின் மேல் அடுக்குகளில் புகை மற்றும் துகள்கள் அதிகமாகப் பரவும். இதனால், சூரிய ஒளி பூமியை வந்தடைவது குறையக்கூடும். உலகின் பல பகுதிகளில் வெப்பநிலை குறைந்து, விவசாய உற்பத்தி பாதிக்கப்படலாம். பல நாடுகளில் பஞ்சம் ஏற்படும் அபாயம் உள்ளது.
செயற்கை நுண்ணறிவால் ஏற்படும் ஆபத்து
மருத்துவம், அறிவியல் ஆராய்ச்சி, கல்வி உள்ளிட்ட துறைகளில் ஏ.ஐ பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதே நேரத்தில், இந்தத் தொழில்நுட்பம் தீங்கிழைக்கும் நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படலாம் என்ற கவலையும் அதிகரித்துள்ளது. குறிப்பாக, ஆபத்தான உயிரியல் ஆயுதங்களை உருவாக்குவதற்கான ஆராய்ச்சிகளில் செயற்கை நுண்ணறிவு தவறாகப் பயன்படுத்தப்படுகிறது. இந்த நிலை நீடித்தால், பொதுமக்களின் உடல்நலத்துக்கும் உலகளாவிய சுகாதார அமைப்புகளுக்கும் கடுமையான பாதிப்புகள் ஏற்படலாம்.
முக்கிய அச்சுறுத்தல்கள்
இதற்கு அடுத்த நிலையில், மனிதர்களின் உடல்நலம் மற்றும் சமூகங்களுக்கு மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய முக்கிய அச்சுறுத்தல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் காற்று மாசுபாடு, குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துக் குறைபாடு, பருவநிலை மாற்றம், வழக்கமான போர்கள், உயர் ரத்த அழுத்தம், வருமான ஏற்றத்தாழ்வு, கல்வி வாய்ப்புகள் குறைதல், தொற்று நோய்கள், உடல் பருமன், மனநலப் பிரச்சனைகள், புகைப்பிடித்தல், அதிகப்படியான மது அருந்துதல், ஆரோக்கியமற்ற முதுமை ஆகியவை அடங்கும்.

