தமிழக அரசியல் வட்டாரத்தில் கடந்த சில நாட்களாக நடிகை திரிஷாவின் பெயர் தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில், திருநெல்வேலியில் அவரது பெயரில் புதிய பேரவை ஒன்று தொடங்கப்பட்டிருப்பது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.
திருநெல்வேலியைச் சேர்ந்த ராஜகோபால் என்பவர் இந்தப் பேரவையைத் தொடங்கியுள்ளார். இதற்கான அறிவிப்பையும் புதிய அமைப்பின் லோகோவையும் அவர் செய்தியாளர்கள் முன்னிலையில் வெளியிட்டுள்ளார். பேரவையின் லோகோவில் நடிகை திரிஷா கைகளைக் கூப்பி வணக்கம் தெரிவிப்பது போன்ற புகைப்படம் இடம்பெற்றுள்ளது. அதனுடன், ‘பதவிக்காக அல்ல… தமிழக மக்களின் உரிமைக்காக’ என்ற வாசகமும் இணைக்கப்பட்டுள்ளது.
இந்தப் புதிய பேரவைக்கு ‘இளைய புரட்சித் தலைவி’ என்று பெயர் சூட்டியிருப்பது அரசியல் வட்டாரத்தில் கூடுதல் கவனத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்குப் பின்னால் ஒரு காரணத்தையும் ராஜகோபால் தெரிவித்துள்ளார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவைப் போன்ற ஆளுமை திரிஷாவிடம் இருப்பதாகவும், அந்த அடிப்படையிலேயே அவருக்கு இந்தப் பட்டத்தை வழங்கியிருப்பதாகவும் கூறியுள்ளார்.
மேலும், விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக ஆட்சியைப் பாராட்டியுள்ள அவர், திரிஷாவும் விஜய்யுடன் இணைந்து அரசியலில் பயணித்தால் தமிழகத்திற்கு சிறப்பான ஆட்சி கிடைக்கும் என்ற நம்பிக்கையையும் வெளிப்படுத்தியுள்ளார். ஏற்கெனவே விஜய்யின் பதவியேற்பு விழாவில் திரிஷா பங்கேற்றது தொடர்பாக பல்வேறு அரசியல் விமர்சனங்கள் எழுந்தன. இந்தச் சூழலில் அவரது பெயரில் பேரவை தொடங்கப்பட்டிருப்பது புதிய விவாதத்திற்கு வழிவகுத்துள்ளது.
ஆனால், இந்தப் பேரவை நடிகை திரிஷாவின் அனுமதியுடன் தொடங்கப்பட்டதா என்பது இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. இதுகுறித்து திரிஷா தரப்பிலிருந்தும் அதிகாரப்பூர்வ விளக்கம் வெளியாகவில்லை.

