மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் : தொகுதி நிலவரம் எப்படி இருக்கு?

2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு மதுராந்தகம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த மரகதம் குமரவேலும், தாராபுரம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த சத்யபாமாவும் தங்களது எம்.எல்.ஏ. பதவிகளை ராஜினாமா செய்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர். இதனால் இரு தொகுதிகளும் காலியானதாக அறிவிக்கப்பட்டன.

இதையடுத்து, மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6, 2026 அன்று நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. வாக்குப்பதிவு அக்டோபர் 6-ம் தேதி நடைபெறுகிறது. அக்டோபர் 9-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

இடைத்தேர்தலுக்கு தடை கோரி வழக்கு

தமிழகத்தில் காலியாக உள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அந்தத் தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதனை விசாரித்த நீதிமன்றம் குறுகிய காலத்தில் ராஜினாமா செய்துள்ள நடவடிக்கைகள் கேலிக்கூத்தான செயல் – இது வாக்காளர்களை அவமானப்படுத்தும் செயல் என்றும் நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். அதேசமயம், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட இரு தொகுதி இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க முடியாது என கூறியது.

99 பேர் வேட்புமனு தாக்கல்

தமிழ்நாட்டில் நடைபெற உள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவடைந்துள்ளது. இரு தொகுதிகளிலும் சேர்த்து மொத்தம் 99 பேர் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். மதுராந்தகத்தில் 48 பேரும், தாராபுரத்தில் 51 பேரும் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

5 முனைப் போட்டி

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளிலும் தவெக, திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி மற்றும் இடதுசாரி கட்சிகள் தனித்தனியாக போட்டியிடுகின்றன. இதனால் இரு தொகுதிகளிலும் 5 முனைப் போட்டி உருவாகியுள்ளது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த இடதுசாரி கட்சிகள், இந்த இடைத்தேர்தலில் தனித்து போட்டியிடும் முடிவை எடுத்துள்ளன

மதுராந்தகம் தொகுதியில் 8 வாக்குசாவடிகள் பதற்றமானவை

மதுராந்தகம் தொகுதியில் 167 வாக்குச்சாவடிகள் உள்ளன. இவற்றில் மொத்தம் 285 வாக்கு செலுத்தும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் படாளம், மேலவலம் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள 8 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளன.

மரகதம் குமரவேலுவுக்கு மக்கள் கடும் எதிர்ப்பு

மரகதம் குமரவேல் மற்றும் சத்யபாமா பதவிகளை ராஜினாமா செய்து பின்னர் தவெகவில் இணைந்து, அதே தொகுதிகளில் மீண்டும் போட்டியிடுவது குறித்தும் எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன. இதனை தொடர்ந்து மதுராந்தகம் தொகுதிக்குட்பட்ட வீராணம் கிராமத்திற்கு மரகதம் குமரவேல் சென்றபோது, அவரை கிராமத்திற்குள் அனுமதிக்காமல் சிலர் எதிர்ப்பு தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

யார் வெற்றி பெறுவார்கள்?

மதுராந்தகம், தாராபுரம் தொகுதியில் அதிமுகவில் இருந்து வெற்றிபெற்று மிக குறுகிய காலத்திலேயே தங்கள் பதவியை ராஜினாமா செய்து விட்டு தவெக வில் இணைந்ததால் இரண்டு தொகுதி மக்களும் கடும் அதிருப்தியில் உள்ளனர். இது தவிர விலைவாசி உயர்வு, மின்வெட்டு பிரச்சனை, சட்டம் ஒழுங்கு பிரச்சனை இவையெல்லாம் இடைத்தேர்தலில் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Saravanan
Saravananhttps://suryamalar.in/
முக்கியமான தமிழ் செய்திகள், தொழில்நுட்பம், சினிமா, சர்வதேச நிகழ்வுகள் மற்றும் மருத்துவம் குறித்த செய்திகளை தொடர்ந்து எழுதி வருகிறேன். நம்பகமான ஆதாரங்களின் அடிப்படையில் துல்லியமான மற்றும் பயனுள்ள தகவல்களை வாசகர்களுக்கு வழங்குவதே எனது நோக்கம்.
HTML tutorial