தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த 51 வயது நபர் ஒருவர், மூன்று ஆண்டுகளாக ரூ.10 நாணயங்களைச் சேமித்து, ரூ.1.23 லட்சம் மதிப்புள்ள ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரை வாங்கியுள்ளார்.
தெலங்கானா மாநிலம், மஞ்சேரியல் மாவட்டத்தை சேர்ந்தவர் பி. ரவி ஜோசப். 51 வயதான இவர் போதகராகப் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் 10-ஆம் தேதி முதல் தனக்குக் கிடைக்கும் ரூ.10 நாணயங்களைச் சேமிக்கத் தொடங்கியுள்ளார்.
இவ்வாறு தினமும் சிறிய தொகையைச் சேமித்து வந்த அவர், மூன்று ஆண்டுகளில் மொத்தம் 12,300 நாணயங்களைச் சேகரித்தார். ரவி ஜோசப்புக்கு நீண்ட காலமாக ராயல் என்ஃபீல்டு புல்லட் மோட்டார் சைக்கிள் வாங்க வேண்டும் என்ற ஆசை இருந்துள்ளது. ஆனால், பொருளாதாரச் சூழ்நிலைகள் காரணமாக அவரால் அந்த ஆசையை நிறைவேற்ற முடியவில்லை.
இதையடுத்து, தன்னிடம் இருந்த ரூ.10 நாணயங்களைக் கொண்டு புதிய ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரை வாங்கத் திட்டமிட்டார். சேமித்த பணத்தைக் கொண்டு ஸ்கூட்டர் வாங்குவதற்காக, ரவி ஜோசப் தனது குடும்பத்தினருடன் ஹோண்டா விற்பனையகத்திற்குச் சென்றார்.
அங்கு அவர் ரூ.10 நாணயங்கள் நிறைந்த மூட்டைகளைக் கொடுத்து ஸ்கூட்டருக்கான தொகையைச் செலுத்தினார். இவ்வளவு நாணயங்களைக் கண்ட ஊழியர்கள், அவற்றை எண்ணிச் சரிபார்க்க சுமார் இரண்டு மணி நேரம் ஆனதாக கூறப்படுகிறது. மொத்தம் 12,300 நாணயங்களை எண்ணி, அவற்றின் மதிப்பு ரூ.1.23 லட்சம் என்பதை உறுதிசெய்த பிறகு அவர் தனது கனவு ஸ்கூட்டரை வாங்கினார்.
ரவி ஜோசப்பின் இந்த முயற்சி சமூக ஊடகங்களில் கவனத்தைப் பெற்றுள்ளது. பெரிய தொகையை ஒரே நேரத்தில் சேமிக்க முடியாதவர்கள், தங்களால் இயன்ற சிறிய தொகையைத் தொடர்ந்து சேமிப்பதன் மூலம் ஒரு இலக்கை அடைய முடியும் என்பதற்கு அவரது அனுபவம் ஓர் எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.

