உத்தரப் பிரதேச மாநிலம், பதோஹி மாவட்டத்தில் உள்ள டோமாம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் ஓம் பிரகாஷ் விஸ்வகர்மா. அவரது மனைவி ப்ரீத்தி விஸ்வகர்மா. கடந்த அக்டோபர் 12-ம் தேதி மாலை ஓம் பிரகாஷ் தனது மனைவியிடம் சாப்பாடு கேட்டுள்ளார். அதற்கு அவர் உருளைக்கிழங்கு குழம்பு சமைத்துப் பரிமாறியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த ஓம் பிரகாஷ்ன் மனைவியை உடலின் பல இடங்களில் கடித்துள்ளார். மேலும் கல்லால் மனைவியை கடுமையாக தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த ப்ரீத்தி மயங்கி விழுந்துள்ளார். இதை பார்த்த அவரது குழந்தைகள் கதறி அழுதுள்ளனர்.
குழந்தையின் சத்தத்தை கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் ப்ரீத்தியை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த ப்ரீத்தியின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக ப்ரீத்தி போலீசில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில், ஓம் பிரகாஷ் விஸ்வகர்மா மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்துள்ளனர். தற்போது, தலைமறைவாக உள்ள ஓம் பிரகாஷைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் போலீசார் கூறியுள்ளனர்.

