மகன் கண் முன்பே தந்தையை சுட்டுக்கொன்ற மர்ம கும்பல்: மகன் கூறிய பகீர் காரணம்

அரியானா மாநிலம் குருகிராமில் மகனுடன் இருசக்கர வாகனத்தில் சென்ற துணிக்கடை வியாபாரி துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரியானா மாநிலம், குருகிராமில் உள்ள பசாய் கிராமத்தைச் சேர்ந்தவர் மகேந்திரா (45). இவர் சதர் பஜாரில் துணிக்கடை நடத்தி வந்தார். அவருடைய மகன்கள் சாஹில் (21) மற்றும் பிரியான்ஷ். நேற்று காலை வழக்கம்போல் கடையைத் திறப்பதற்காக இருவரும் வீட்டில் இருந்து இருசக்கர வாகனத்தில் புறப்பட்டனர்.

அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத 3 நபர்கள் திடீரென அவர்களை வழிமறித்து துப்பாக்கியால் சுட்டுள்ளனர். துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு அந்த 3 பேரும் உடனடியாக அங்கிருந்து தப்பி ஓடினர்.

துப்பாக்கி குண்டு பாய்ந்ததில் படுகாயமடைந்த மகேந்திரா சாலையில் விழுந்தார். அவரை மீட்டு அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மகேந்திராவுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த சம்பவத்தில் முக்கியமான பின்னணி ஒன்றும் போலீஸ் விசாரணையில் கவனத்திற்கு வந்துள்ளது. மகேந்திராவின் மூத்த மகன் பிரியான்ஷ், கடந்த 2025-ம் ஆண்டு நடைபெற்ற ஒரு கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு தற்போது சிறையில் உள்ளார். இந்த நிலையில், சிறையில் இருக்கும் பிரியான்ஷை பழிவாங்குவதற்காக அவரது தந்தை மகேந்திரா குறிவைக்கப்பட்டிருக்கலாம் என்று மற்றொரு மகனான சாஹில் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பாக குருகிராம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர். துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்ற 3 மர்ம நபர்களையும் தேடி வருகின்றனர். மகன் கண் முன்னே தந்தை சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் குருகிராம் பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Saravanan
Saravananhttps://suryamalar.in/
முக்கியமான தமிழ் செய்திகள், தொழில்நுட்பம், சினிமா, சர்வதேச நிகழ்வுகள் மற்றும் மருத்துவம் குறித்த செய்திகளை தொடர்ந்து எழுதி வருகிறேன். நம்பகமான ஆதாரங்களின் அடிப்படையில் துல்லியமான மற்றும் பயனுள்ள தகவல்களை வாசகர்களுக்கு வழங்குவதே எனது நோக்கம்.
HTML tutorial