தமிழக எம்.எல்.ஏ.க்களுக்கு அரசு சார்பில் கார் வழங்கும் அறிவிப்பைத் தொடர்ந்து, அவர்களுக்கு ஏற்ற வாகனத்தை தேர்வு செய்யும் பணிகள் தொடங்கியுள்ளன. இதற்காக மஹிந்திரா நிறுவனத்தின் 6 வகையான கார்கள் தலைமைச் செயலகத்துக்கு வந்துள்ளது.
எம்.எல்.ஏ.க்களுக்கு கார்
பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ள எம்.எல்.ஏ.க்கள் நேர்மையாக பணியாற்றுவதற்கு அரசு சார்பில் கார் மற்றும் உதவியாளர் வசதிகளை வழங்க வேண்டும் என்று தமிழக சட்டசபையில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து, அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் இலவசமாக கார் வழங்கப்படும் என்று முதலமைச்சர் விஜய் சட்டசபையில் 110-வது விதியின் கீழ் அறிவிப்பை வெளியிட்டார். மேலும், தனி உதவியாளர் மற்றும் ஓட்டுநருக்கான ஊதியம், எரிபொருள் செலவு உள்ளிட்டவற்றுக்காக மாதந்தோறும் ரூ.1 லட்சம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
தலைமைச் செயலகத்துக்கு வந்த 6 கார்கள்
முதலமைச்சரின் அறிவிப்பைத் தொடர்ந்து, மஹிந்திரா நிறுவனத்தின் XUV 7XO, XUV 3XO, Scorpio-N, ScorpioClassic, Bolero, Bolero Neo ஆகிய 6 மாடல் கார்கள் தலைமைச் செயலக வளாகத்துக்கு கொண்டு வரப்பட்டன.
இந்த கார்களின் விலை சுமார் ரூ.9 லட்சம் முதல் ரூ.26.18 லட்சம் வரை இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், எம்.எல்.ஏ.க்களுக்கு எந்த வகையான கார் பொருத்தமாக இருக்கும் என்பதை முடிவு செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இந்த கார்களை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து வருகின்றனர்.
