இனி இஷ்டம் போல குடிக்கலாம் : டாஸ்மாக் கடைகளில் புதிய நடை முறை இன்று முதல் அமல்

தமிழகத்தில் சுமார் 4,000 டாஸ்மாக் மதுபானக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு பிராந்தி, விஸ்கி, வோட்கா உள்ளிட்ட இந்தியாவில் தயாரிக்கப்படும் வெளிநாட்டு மதுபானங்கள், பீர் மற்றும் ஒயின் உள்ளிட்டவை விற்பனை செய்யப்படுகின்றன

25 புதிய வகை மதுபானம்

தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகளில் 25 புதிய வகை மதுபானங்களை அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக 20-க்கும் மேற்பட்ட மதுபான உற்பத்தி நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, 25 வகைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. தற்போது அவற்றுக்கான விலை நிர்ணயம் நடைபெற்று வருகிறது. டாஸ்மாக் இயக்குநர்கள் குழுவின் ஒப்புதலுக்குப் பிறகு புதிய மதுபானங்கள் விற்பனைக்கு கொண்டுவரப்படஉள்ளது.

அதேநேரத்தில், டாஸ்மாக் கடைகளுக்கு மதுபானங்களை அனுப்பும் முறையிலும் முக்கிய மாற்றம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி, இனி ஒவ்வொரு கடையின் உண்மையான தேவை மற்றும் விற்பனை நிலவரத்தின் அடிப்படையில் மதுபானங்களை அனுப்ப வேண்டும் என டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

தேவைக்கு ஏற்ப மதுபானங்கள்

டாஸ்மாக் கடைகளில் வாடிக்கையாளர்கள் விரும்பும் சில மதுபான வகைகள் கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்த நிலையில், சரக்கு விநியோக முறையில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. அதன் படி, இன்று முதல் மாவட்ட மேலாளர்கள், ஒவ்வொரு டாஸ்மாக் கடைக்கும் தேவையான மதுபானங்களை அந்தந்த கடையின் உண்மையான தேவை மற்றும் கோரிக்கையின் அடிப்படையில் அனுப்ப வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு குறிப்பிட்ட காலகட்டத்தில் பல்வேறு நிறுவனங்களிடம் இருந்து மதுபானங்களை சம அளவில் கொள்முதல் செய்து, கடைகளுக்கும் சமமாகப் பிரித்து வழங்கும் நடைமுறை பின்பற்றப்பட்டது. தற்போது அந்த நடைமுறை நிறுத்தப்பட்டு, கடைகளின் தேவைக்கு ஏற்ப சரக்குகளை அனுப்பும் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த மாற்றத்தின் மூலம் ஒரு கடையில் அதிகம் விற்பனையாகும் மதுபான வகைகள் தேவைக்கேற்ப கிடைக்க வாய்ப்பு ஏற்படும். அதேவேளையில், விற்பனை குறைவாக உள்ள மதுபானங்கள் அதிக அளவில் கடைகளில் தேங்குவதை குறைக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டாஸ்மாக் ஊழியர்களுக்கு ரூ.20,000 முன்பணம்

டாஸ்மாக் ஊழியர்களுக்காகவும் தமிழக அரசு சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. தகுதியுடைய சில்லறை விற்பனைக்கடை ஊழியர்களுக்கு ஆண்டுக்கு ஒருமுறை ரூ.20,000 பண்டிகைக் கால முன்பணம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஊழியர்கள் தங்களது விருப்பப்படி பொங்கல், தீபாவளி, கிறிஸ்துமஸ், ரம்ஜான், பக்ரீத் உள்ளிட்ட பண்டிகைகளில் ஏதேனும் ஒன்றைத் தேர்வு செய்து இந்த முன்பணத்தைப் பெறலாம். இந்தத் தொகைக்கு வட்டி வசூலிக்கப்படாது. பெறப்பட்ட ரூ.20,000 தொகை 10 மாதங்களில் மாதம் ரூ.2,000 வீதம் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும்.

புதிய சீருடை அறிமுகம்

டாஸ்மாக் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் உதவி விற்பனையாளர்களுக்கு ஆண்டுக்கு மூன்று சீருடைகள் வழங்கவும், தையல் செலவுக்காக ரூ.6,000 வழங்கவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி விற்பனை மற்றும் உதவி விற்பனையாளர்களுக்கு வெளிர் பழுப்பு நிற சட்டை, அடர் சாம்பல் நிற பேன்ட் வழங்கப்பட உள்ளது. மேற்பார்வையாளர்களுக்கு நீல நிற சட்டை மற்றும் அடர் நீல நிற பேன்ட் வழங்கப்பட உள்ளது. இந்த புதிய சீருடை நடைமுறையை நவம்பர் 15-ம் தேதிக்குள் அனைத்து டாஸ்மாக் கடை ஊழியர்களும் பின்பற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Saravanan
Saravananhttps://suryamalar.in/
முக்கியமான தமிழ் செய்திகள், தொழில்நுட்பம், சினிமா, சர்வதேச நிகழ்வுகள் மற்றும் மருத்துவம் குறித்த செய்திகளை தொடர்ந்து எழுதி வருகிறேன். நம்பகமான ஆதாரங்களின் அடிப்படையில் துல்லியமான மற்றும் பயனுள்ள தகவல்களை வாசகர்களுக்கு வழங்குவதே எனது நோக்கம்.
HTML tutorial