தமிழகத்தின் நிர்வாகத் தேவைகளை கருத்தில் கொண்டு சென்னையில் ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் புதிய தலைமைச் செயலக வளாகம் அமைக்கப்படும் என்று முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். சுமார் 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் உருவாக்கப்பட உள்ள இந்த புதிய வளாகத்தில் சட்டப்பேரவை மற்றும் அனைத்து முக்கிய அரசு துறைகளையும் ஒருங்கிணைக்கும் வகையில் நவீன வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன.
சென்னையில் உள்ள புனித ஜார்ஜ் கோட்டை பல நூற்றாண்டுகளாக தமிழகத்தின் நிர்வாக மையமாக இருந்து வருகிறது. கிழக்கிந்திய கம்பெனியின் வணிக நடவடிக்கைகளுக்காக 1640-ம் ஆண்டு அங்கு கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டு, 1644-ம் ஆண்டு நிறைவடைந்ததாக முதல்வர் தனது உரையில் குறிப்பிட்டார்.
பின்னர் சென்னை மாகாணத்தின் அதிகாரப்பூர்வ நிர்வாகத் தலைமையிடமாகவும் இந்த வளாகம் செயல்பட்டது. இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகும் தமிழக அரசின் தலைமைச் செயலகம் தொடர்ந்து இங்குதான் இயங்கி வருகிறது.
தற்போது தலைமைச் செயலகத்தின் பணிகள் இரண்டு முக்கிய கட்டடங்களில் நடைபெற்று வருகின்றன. இதுதவிர, 1978-ம் ஆண்டு கட்டப்பட்ட நாமக்கல் கவிஞர் மாளிகையும் நிர்வாகப் பணிகளுக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த இரண்டு கட்டடங்களிலும் 30-க்கும் மேற்பட்ட அரசு துறைகளைச் சேர்ந்த செயலர்கள் மற்றும் அதிகாரிகளுடன் 6,000-க்கும் அதிகமான பணியாளர்கள் பணியாற்றி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது, அரசுத் துறைகளின் பணிச்சுமையும் பணியாளர்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ள நிலையில், நிர்வாகப் பணிகளை நவீனப்படுத்தும் நோக்கில், சட்டப்பேரவை மற்றும் தலைமைச் செயலகம் அடங்கிய ஒருங்கிணைந்த புதிய வளாகத்தை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.
புதிய கட்டடத்தில் அனைத்து அரசு துறைகளையும் ஒரே நிர்வாக வளாகத்தின் கீழ் ஒருங்கிணைக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், நவீன தீயணைப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள், மாற்றுத்திறனாளிகள் எளிதாக பயன்படுத்தக்கூடிய வசதிகள், போதுமான வாகன நிறுத்துமிடங்கள் மற்றும் மாநாட்டு அரங்குகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இடம்பெற உள்ளன.
புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்பட்டாலும், புனித ஜார்ஜ் கோட்டையின் வரலாற்று முக்கியத்துவம் புறக்கணிக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. கோட்டையில் உள்ள பாரம்பரிய கட்டடங்கள் வரலாற்றுச் சின்னங்களாக பாதுகாக்கப்பட்டு, அவற்றின் முக்கியத்துவம் எதிர்கால தலைமுறைகளுக்கும் தெரியும்வகையில் பராமரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

