ஈரானில் மஷத் நகரில் இருந்து கெர்மான்ஷா நோக்கிப் புறப்பட்ட போயிங் பயணிகள் விமானத்தில், புறப்பட சில நிமிடங்களிலேயே ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பயணிகள் பீதியில் உறைந்தனர்.
ரன்வேயில் இருந்து விமானம் கிளம்பிய சில நிமிடங்களில், எதிர்பாராதவிதமாக டயர் வெடித்துச் சிதறியது. வெடித்த டயரின் கூர்மையான பாகங்கள் விமானத்தின் என்ஜினுக்குள் பாய்ந்து, என்ஜினை சேதப்படுத்தியுள்ளது. இதனால் விமானம் நடுவானில் குலுங்கியது.
விமானம் குலுங்கியதால் கேபின் பகுதியின் மேற்கூரை உடைந்து கீழே விழுந்தது. மேலும், தலைக்கு மேல் உள்ள லக்கேஜ் வைக்கும் பெட்டிகள் தானாகத் திறந்து கொண்டு, அதிலிருந்த பயணிகளின் பைகள் மற்றும் பொருட்கள் கீழே அமர்ந்திருந்த பயணிகள் மீது விழுந்தன.
இந்த சம்பவத்தால் உள்ளே இருந்த பயணிகள் அலற தொடங்கினர். இதையடுத்து, அந்த விமானம், மீண்டும் மஷத் விமான நிலையத்தை திரும்பியது. இந்த அதிர்ச்சி சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாகப் பயணிகள் மற்றும் பணியாளர்கள் யாருக்கும் எந்தவிதமான காயங்களும் ஏற்படவில்லை என்றும், அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணையை மேற்கொள்ள ஈரானிய விமானப் போக்குவரத்து அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

