யூடியூப் செயலியை உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். பயனர்களின் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் யூடியூப் செயலியில் புதிய மாற்றங்கள் கொண்டுவரப்படுகிறது. இந்த சூழலில், யூடியூப்பின் முகப்புப் பக்கத்தில் புதிய மாற்றம் கொண்டு வரப்போவதாக யூடியூப் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி நீல் மோகன் அறிவித்துள்ளார்.
இந்த மாற்றங்கள் மூலம், யூடியூப்பின் முகப்புப் பக்கத்தில் பயனர்கள் தங்களுக்குப் பிடித்த தலைப்புகளுக்கு ஏற்ப காணொளிகளைத் தனியாகத் தேர்ந்தெடுத்துப் பார்க்க முடியும். முகப்புப் பக்கத்தின் மேற்பகுதியில் உள்ள ‘பிளஸ்’ குறியீட்டைப் பயன்படுத்தலாம். அதில் விரும்பும் தலைப்பை எழுதினால், அதற்கேற்ற காணொளிகளை யூடியூப் தனியாகத் தொகுத்துக் காண்பிக்கும்.
யூடியூப் அறிமுகப்படுத்தும் புதிய வசதியை இலவசக் கணக்கைப் பயன்படுத்துபவர்கள் ஒரே நேரத்தில் அதிகபட்சம் 3 பட்டியல்களைச் சேமிக்க முடியும். யூடியூப் பிரீமியம் சந்தாதாரர்கள் அதிகபட்சம் 8 பட்டியல்களைச் சேமித்துப் பயன்படுத்தலாம்.
யூடியூப்பில் தினமும் பல்வேறு வகையான காணொளிகள் வெளியாகின்றன. ஆனால், பயனர்கள் அனைவருக்கும் ஒரே மாதிரியான காணொளிகள் தேவையில்லை. சிலர் செய்திகளை விரும்புவார்கள்; சிலர் விளையாட்டு, திரைப்படம், சமையல் அல்லது கல்வி தொடர்பான காணொளிகளைப் பார்க்க விரும்புவார்கள்.
புதிய வசதியின் மூலம், தங்களுக்குத் தேவையான தலைப்புகளைத் தனியாகத் தேர்ந்தெடுத்து அதற்கேற்ற காணொளிகளைப் பெற முடியும். இதனால் தேவையற்ற காணொளிகளைத் தேடுவதற்குச் செலவிடும் நேரம் குறைய வாய்ப்புள்ளது.

