உலகம் முழுவதும் பல கோடி மக்கள் பயன்படுத்தும் ChatGPT-ஐ உருவாக்கிய OpenAI நிறுவனத்துக்கு எதிராக அமெரிக்காவின் 8 மாகாணங்கள் வழக்குத் தொடர்ந்துள்ளன.
ChatGPT-இன் பாதுகாப்பு குறித்துப் பயனாளர்களைத் தவறாக வழிநடத்தி, மாநில நுகர்வோர் பாதுகாப்புச் சட்டங்களை அந்நிறுவனம் மீறியதாக அந்த வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைச் சோதிக்கும் போது போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை எனவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அயோவா, கன்சாஸ், அரிசோனா, ஆர்கன்சாஸ், ஐடஹோ, மொன்டானா, நெப்ராஸ்கா மற்றும் மேற்கு வர்ஜீனியா ஆகிய எட்டு அமெரிக்க மாகாணங்கள் OpenAI நிறுவனத்துக்கு எதிராகத் தனித்தனியாக வழக்குத் தொடர்ந்துள்ளன.
ChatGPT பயனர்களுடன் உரையாடும்போது அவர்களின் கருத்துகளுக்கு அதிகமாக ஒத்துப்போகும் வகையிலும், தொடர்ந்து உரையாடத் தூண்டும் வகையிலும் செயல்படுவதாக வழக்கு மனுக்களில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதனால் பயனர்கள் அந்தக் கருவியை அதிகமாக நம்பி, ஆபத்தான உரையாடல்களில் ஈடுபடும் வாய்ப்பு அதிகரிக்கலாம் என்றும் அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

