பத்மாசனம் என்பது இரண்டு கால்களையும் மடக்கி, கைகளை தொடையின் மீது வைத்து செய்யப்படும் ஒரு ஆசனம் ஆகும். வடமொழியில் ‘பத்மம்’ என்றால் தாமரை; ‘ஆசனம்’ என்றால் அமரும் நிலை. தாமரை மலர் விரிந்திருப்பதைப் போன்ற தோற்றத்தில் கால்களை மடக்கி அமர்வதால் இதற்குத் தாமரை ஆசனம் என்ற பெயரும் உண்டு.
பத்மாசனம் செய்வது எப்படி?
தரையில் யோகா விரிப்பை விரித்து, இரண்டு கால்களையும் முன்னால் நீட்டி அமரவும். வலது காலை மெதுவாக மடக்கி, இடது தொடையின் மீது வைக்கவும். பின்னர், இடது காலை மடக்கி, வலது தொடையின் மீது வைக்கவும்.
முதுகை நேராகவும் தோள்களைத் தளர்வாகவும் வைத்துக்கொள்ளவும். இரண்டு கைகளையும் முழங்கால்களின் மீது வைக்கவும். கண்களை மூடிக்கொண்டு மூச்சை உள்ளிழுத்து வெளியே விடவும். ஆசனத்தைச் செய்யும்போது முழங்கால் அல்லது இடுப்பில் வலி ஏற்பட்டால் உடனடியாக நிறுத்த வேண்டும்.
பத்மாசனம் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்
பத்மாசனம் செய்வதால் செரிமான உறுப்புகளுக்கு இரத்த ஓட்டத்தை அதிகரித்து செரிமானம் சிறப்பாக செயல்பட உதவுகிறது. இது வயிறு உப்புசம், மலச்சிக்கல் மற்றும் அஜீரணம் போன்ற பிரச்சனைகளைக் குறைக்க உதவுகிறது.
பத்மாசனம் மன அமைதியை மேம்படுத்தவும், மன அழுத்தத்தைக் குறைக்கவும் உதவுகிறது. இடுப்புப் பகுதியைத் தளர்த்த உதவும். உடலின் மூன்று திரவங்களான வாயு, பித்தம் மற்றும் சளி ஆகியவற்றைச் சமநிலையில் வைத்திருக்க உதவும்.

