ஆம்புலன்ஸில் இருந்த ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்து நோயாளி உயிரிழப்பு

ஒடிசா மாநிலம் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைக்கு வெளியே, தனியார் ஆம்புலன்ஸில் ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்ததில் நோயாளி ஒருவர் உயிரிழந்தார்.

ஒடிசா மாநிலத்தில், குண்டாபாய் கிராமத்தைச் சேர்ந்த சுஜோஷ் பாரிக் என்ற நோயாளி, உடல்நலக் குறைவு காரணமாக உடாலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். மேல் சிகிச்சைக்காக தனியார் ஆம்புலன்ஸ் மூலம் புவனேஸ்வரில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

அப்போது, ஆம்புலன்ஸில் இருந்த ஆக்சிஜன் சிலிண்டர் திடீரென வெடித்துள்ளது. வாகனத்தின் மேற்கூரையும் தூக்கி வீசப்பட்டது. பின்னர் ஆம்புலன்ஸில் தீ வேகமாகப் பரவியது. அங்கிருந்தவர்கள் உடனடியாக மீட்புப் பணியில் ஈடுபட்டு, ஆம்புலன்ஸுக்குள் இருந்த நோயாளியை வெளியே கொண்டு வந்தனர். இருப்பினும் அவர் உயிரிழந்தார். இதில் இருவருக்கு தீக்காயம் ஏற்பட்டது.

விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அவர்கள் ஆம்புலன்ஸில் பரவிய தீயைக் கட்டுப்படுத்தினர்.

இந்தச் சம்பவம் தொடர்பாகக் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நோயாளிக்குச் சுவாச உதவி அளிப்பதற்காக ஆம்புலன்ஸில் இருந்த ஆக்சிஜன் சிலிண்டரின் வால்வைத் திறந்தபோது விபத்து ஏற்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Saravanan
Saravananhttps://suryamalar.in/
முக்கியமான தமிழ் செய்திகள், தொழில்நுட்பம், சினிமா, சர்வதேச நிகழ்வுகள் மற்றும் மருத்துவம் குறித்த செய்திகளை தொடர்ந்து எழுதி வருகிறேன். நம்பகமான ஆதாரங்களின் அடிப்படையில் துல்லியமான மற்றும் பயனுள்ள தகவல்களை வாசகர்களுக்கு வழங்குவதே எனது நோக்கம்.
HTML tutorial