பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் : விஜய் அரசுக்கு எதிராக திரளும் மீனவர்கள்!

சென்னையில் ரூ.1,200 கோடி செலவில் புதிய தலைமைச் செயலகம் மற்றும் சட்டப்பேரவை வளாகம் அமைக்கும் திட்டத்திற்கு தமிழக அரசு முதல் கட்ட அனுமதி வழங்கி அரசாணை வெளியிட்டுள்ளது. பட்டினப்பாக்கம் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மீனவர்கள் ஆலோசனை நடத்தி போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

பட்டினப்பாக்கத்தில் இடம் தேர்வு

தமிழகத்தின் தற்போதைய தலைமைச் செயலகம் சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், புதிய தலைமைச் செயலகம் மற்றும் சட்டப்பேரவை வளாகத்தை அமைக்க தமிழக அரசு முடிவு செய்தது. சட்டப்பேரவையில் 110-வது விதியின் கீழ் முதலமைச்சர் ஜோசப் விஜய், இதற்கான அறிவிப்பை வெளியிட்டிருந்தார். புதிய திட்டத்துக்கு சுமார் ரூ.1,200 கோடி செலவிடப்படும் என தெரிவிக்கப்பட்டது.

புதிய தலைமைச் செயலகத்துக்கான இடத்தைத் தேர்வு செய்வதில் பட்டினப்பாக்கம், கிண்டி மற்றும் நந்தம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகள் பரிசீலனையில் இருந்தன. இறுதியாக, பட்டினப்பாக்கத்தில் சாந்தோம் பிரதான சாலை பகுதியில் உள்ள வீட்டுவசதி வாரியத்துக்குச் சொந்தமான நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

20 லட்சம் சதுர அடியில் கட்டடம்

மொத்தம் 22 ஏக்கர் பரப்பளவில், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் மற்றும் வருவாய்த் துறைக்குச் சொந்தமான நிலத்தில் இந்த வளாகம் அமைக்கப்பட உள்ளது. திட்டத்தை செயல்படுத்துவதற்காக பல்வேறு குழுக்களையும் அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது.

மீனவர்கள் எதிர்ப்பு

புதிய தலைமைச் செயலகம் பட்டினப்பாக்கத்தில் அமைக்கப்படுவதற்கு அப்பகுதி மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பட்டினப்பாக்கம் சுற்றுவட்டாரத்தில் ஏராளமான மீனவக் குடியிருப்புகள் உள்ள நிலையில், புதிய கட்டுமானம் மீன்பிடித் தொழில் மற்றும் அதைச் சார்ந்த நடவடிக்கைகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் என அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இது தவிர, ஏற்கெனவே போக்குவரத்து நெரிசல் காணப்படும் பட்டினப்பாக்கம் பகுதியில் தலைமைச் செயலகம் அமைக்கப்பட்டால், போக்குவரத்து நெரிசல் மேலும் அதிகரிக்கக்கூடும் என்றும் மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

செப்டம்பர் 15-ல் முக்கிய ஆலோசனை

புதிய தலைமைச் செயலகத் திட்டம் தொடர்பாக செப்டம்பர் 15-ம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், பழவேற்காடு முதல் கோவளம் வரையிலான மீனவ கிராமங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.

புதிய தலைமைச் செயலகத் திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றுவது குறித்து இதில் ஆலோசிக்கப்பட உள்ளது. அரசு தங்களது கோரிக்கையை ஏற்காவிட்டால் போராட்டத்தில் ஈடுபடுவது குறித்தும் முடிவு செய்யப்படும் என மீனவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Saravanan
Saravananhttps://suryamalar.in/
முக்கியமான தமிழ் செய்திகள், தொழில்நுட்பம், சினிமா, சர்வதேச நிகழ்வுகள் மற்றும் மருத்துவம் குறித்த செய்திகளை தொடர்ந்து எழுதி வருகிறேன். நம்பகமான ஆதாரங்களின் அடிப்படையில் துல்லியமான மற்றும் பயனுள்ள தகவல்களை வாசகர்களுக்கு வழங்குவதே எனது நோக்கம்.
HTML tutorial