வேலூர் மாவட்டம் கணியம்பாடி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற 18 வயது இளைஞர் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் கணியம்பாடி அடுத்த கட்டுப்படி பகுதியில் உள்ள இருதய மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் ஆதிலால். கூலி வேலை செய்து வரும் இவரது மகன் ஆசிப், 18. இவர் கடந்த 19-ம் தேதி சனிக்கிழமை மாலை இருசக்கர வாகனத்தில் ஆரணியில் இருந்து வேலூர் நோக்கி சென்றுள்ளார்.
ஆசிப் கணியம்பாடியில் உள்ள பாரதி நகர் பகுதியில் சென்றபோது, அவருக்கு முன்னால் சென்ற வாகனம் மெதுவாக சென்றதாக கூறப்படுகிறது. இதனால் அந்த வாகனத்தை முந்திச் செல்ல முயன்றுள்ளார். அப்போது எதிரே மற்றொரு வாகனம் வருவதைக் கண்டு திடீரென பிரேக் பிடித்துள்ளார். இதில் இருசக்கர வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்த ஆசிப் சாலையின் வலதுபுறம் கீழே விழுந்துள்ளார்.
அந்த நேரத்தில் எதிர்திசையில் வந்த கார் ஆசிப்பின் தலையில் ஏறி இறங்கியதாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ஆசிப் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
விபத்து குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் ஆசிப்பின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், விபத்து நடைபெற்றபோது பதிவான சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது. அதில், இருசக்கர வாகனத்தில் வந்த ஆசிப் கீழே விழுவதும், பின்னர் கார் அவர் மீது மோதுவதும் பதிவாகியுள்ளது.
மேலும், விபத்து நடந்த பிறகு அந்த வழியாக சென்ற சிலரும், அருகில் இருந்தவர்களும் சம்பவத்தை கவனித்ததாகக் கூறப்படும் நிலையில், உடனடியாக அவரை மீட்கவோ அல்லது உதவி செய்யவோ முன்வராத காட்சிகளும் பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

