பொன்னேரியில் பெண் ஊழியர் மீது தீ வைப்பு; தப்பிய நபரை சுட்டுப்பிடித்த போலீஸ்

பொன்னேரி அரசு மருத்துவமனையில் தற்காலிக பணியில் இருந்த பெண் ஊழியர் ராஜேஸ்வரி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த பிரகாஷ் என்ற இளைஞரை காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அரசு மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் ராஜேஸ்வரி என்பவர் தற்காலிக ஊழியராகப் பணியாற்றி வந்துள்ளார். சம்பவத்தின்போது அவர் மீது பிரகாஷ் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார். இதில் ராஜேஸ்வரிக்கு பலத்த தீக்காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சம்பவத்துக்குப் பிறகு பிரகாஷ் என்ற நபர், அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். அவரை பிடிக்க போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில், பிரகாஷ், பெருஞ்சேரி மயான பூமி அருகே பதுங்கியிருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து பொன்னேரி போலீசார் பிரகாஷை பிடிக்க முயன்றபோது, தான் மறைத்து வைத்திருந்த பட்டாக்கத்தியால் உதவி ஆய்வாளர் தமிழரசனை வெட்டியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, காவல் ஆய்வாளர் சிவக்குமார் துப்பாக்கியால் பிரகாஷின் காலில் சுட்டுள்ளார்.

துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த பிரகாஷ் கைது செய்யப்பட்டு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கத்தியால் தாக்கப்பட்ட உதவி ஆய்வாளர் தமிழரசனும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

பொன்னேரி அரசு மருத்துவமனையில் நடைபெற்ற இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

Saravanan
Saravananhttps://suryamalar.in/
முக்கியமான தமிழ் செய்திகள், தொழில்நுட்பம், சினிமா, சர்வதேச நிகழ்வுகள் மற்றும் மருத்துவம் குறித்த செய்திகளை தொடர்ந்து எழுதி வருகிறேன். நம்பகமான ஆதாரங்களின் அடிப்படையில் துல்லியமான மற்றும் பயனுள்ள தகவல்களை வாசகர்களுக்கு வழங்குவதே எனது நோக்கம்.
HTML tutorial